சைதாப்பேட்டையில் கழிவு நீர் மற்றும் மழை நீர் இரண்டும் கலந்து செல்லும் அவலம்

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்,…

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழ் இன்று, தொடர் நேரலை மூலமாக வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மக்கள் முன்வைக்கும் குறைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டை, திவான் பாஷன் தெரு மக்கள் கூறியதாவது; மிகவும் சின்ன தெருக்களை கொண்ட இந்த பகுதிகளில், கழிவு நீர் மற்றும் மழை நீர் இரண்டும் கலந்து செல்கிறது. இதனால், இங்கு அதிக நோய் தொற்று ஏற்படுவதாக அச்சத்தில் இருக்கிறோம்.

இந்த தெருக்களில் மழை பெய்யும் முன்பே, சாலையில் கழிவு நீர் ஓடிக்கொண்டு இருந்தது. தொடர்ந்து, நாங்கள் எங்களின் கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். ஆனால், இந்த பகுதி பள்ளமாக உள்ளதாகவும், மோட்டார் வைத்து இங்கு உள்ள நீரை அப்புறப்படுத்துவதாக சொல்கிறார்கள் அதனை விரைந்து செய்து கொடுக்க வேண்டும்.

நாங்கள் இந்த மழை நீரில் சென்று வருவதால், காலில் சேற்றுப்புண் போன்ற நோய் தொற்று உண்டாகுகிறது. தெருவில் கால் வைக்க முடியாத நிலை உள்ளது. கழிவு நீருடன் மலக் கழிவுகள் தெருவில் வருவது முகம் சுழிக்க வைக்கிறது. நாங்கள் எப்படி இந்த பகுதியில் வசிப்பது? சுமார் 40 நாளாக இப்படியே இருந்தால், தீர்வுதான் என்ன? போராட்டமும் செய்து பார்த்துவிடோம் இன்னமும் தீர்வு இல்லை. சுமார் 45 ஆண்டுகாலமாக நாங்கள் இந்த பகுதியில் வசித்து வருகிறோம். இதோ செய்கிறோம், செய்கிறோம் என்கிறார்கள் 45 நாட்களாக.

புதிய பைப்புகள் அமைத்து நீர் செல்ல வழி செய்தால் மட்டுமே தீர்வாக இருக்கும். இல்லையென்றால், நாங்கள் மறியலில் ஈடுபடுவோம் என கோரிக்கையை முன்வைக்கின்றனர் சென்னை சைதாப்பேட்டை, திவான் பாஷன் தெரு மக்கள்.

சுகாதாரமற்ற நீர் காரணமாக உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதாகவும், இப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.