“நான் தவெக-வை புகழ்ந்து பேசியதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார்

நான் தவெக-வை புகழ்ந்து பேசியதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றிக்கு எதிராக அ.தி.மு.க.வின் வி.பி.பிரபு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தனர்.

அப்போது நீதிபதி சஞ்சய் குமார், “வழக்கை வேறு அமர்வு முன்பு பட்டியலிடுவதற்காக பரிந்துரைக்கிறேன், ஏனெனில் த.வெ.க தொடர்பாக தான் புகழ்ந்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி உள்ளன. எனவே இந்த வழக்கை தான் விசாரிப்பது சரியாக இருக்காது என்பதால் வேறு அமர்வில் பட்டியலிட பரிந்துரைப்பதாக” கூறினார்.

தமிழக முதலமைச்சர் குறித்து பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் விளக்கம்:-

தமிழ்நாடு தொடர்பான ஒரு குற்ற வழக்கை அரசு வழக்கறிஞர் ஒத்திவைக்க கோரிய போது நான் சில கருத்துக்களை கூறியிருந்தேன்

அது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பாக தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் என்ற ஒரு தகவல் கிடைத்ததாகவும் ஆனால் நீங்கள் ஏன் வழக்கை தொடர்ச்சியாக ஒத்தி வைக்க கோருகிறீர்கள் என்று தான் தெரிவித்திருந்தேன். ஆனால் நான் தமிழக வெற்றி கழகத்தை புகழ்ந்தது போல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.

இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூரில் இருந்து கூட தமிழக வெற்றி கழகத்தை புகழ்ந்து பேசியதாக தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன

ஆனால் நான் கூறியது முற்றிலும் வேறுவிதமானது, ஏனெனில் வேகமாக முதல்வர் செயல்பட விரும்புகிறார் என்றால் நீங்கள் ஏன் மெதுவாக செயல்படுகிறீர்கள் என்ற பொருளில் நான் கூறியிருந்தேன். அது அப்படியே தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.தமிழ முதல்வரை புகழ்ந்து பேசியதாக சமூக வலைதளங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது

எனவே தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் ஒருவரின் வழக்கை தான் விசாரித்தால் சரியாக இருக்காது என்பதால் தார்மீக அடிப்படையில் இந்த வழக்கில் இருந்து விலகுவதாகவும், தான் அல்லாத வேறு ஒரு அமர்வில் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட இந்த மனுவை பட்டியலிட பரிந்துரைப்பதாகவும் நீதிபதி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.