ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கரப்பான் பூச்சி கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் நிர்வாகிகள் அசுதோஷ் ரங்கா, அஜின்கியா ஸிண்டே ஆகியோர் தடையை மீறி ஜந்தர் மந்தரில் தேசிய கொடியுடன் நுழைந்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து சௌரவ், அசுதோஷ், அஜிங்கியா ஆகிய சிஜேபி நிர்வாகிகள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ஆகியோரை 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிஜேபியினர் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தும் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,“இந்த அரசாங்கத்தால் எத்தனை போராட்டக்காரர்களைக் கைது செய்ய முடியும்? எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும்? அவர்கள் எவ்வளவு இளைஞர்களைச் சிறையில் அடைக்கிறார்களோ, அவ்வளவுக்கும் எந்தவொரு அரசியல் சார்பும் இல்லாத சாதாரண குடிமக்களும் வீதிக்கு வந்து, மக்களின் உண்மையான சக்தியை அவர்களுக்குக் காட்டுவார்கள்! அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோருக்கு எங்கள் ஆதரவு! அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்டப் பிரதிநிதித்துவத்தையும் ஆதரவையும் வழங்க திமுக தயாராக உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




