எம்ஜிஆர் தேர்தல் பிரசாரம் செய்ததால் திமுக ஜெயித்தது எனக் கூற முடியாது-முரசொலி நாளிதழ்

“எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தான் தி.மு.க. ஜெயித்தது; அதனால் அண்ணா முதலமைச்சர் ஆனார் எனக் கூற முடியாது” என்று திமுகவின் அதிகாரப்பூர்வமான முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:…

“எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தான் தி.மு.க. ஜெயித்தது; அதனால் அண்ணா முதலமைச்சர் ஆனார் எனக் கூற முடியாது” என்று திமுகவின் அதிகாரப்பூர்வமான முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

எம்ஜிஆர், திமுகவில் ஒரு இடைச்செருகல்! அண்ணா இந்த இயக்கம் கண்டபோது, அவர் திமுகவிலேயே இல்லை! திமுக தேர்தல் பிரச்சாரங்கள், மாநாடுகளில் பல கலைத் துறை பிரபலங்கள் பங்கேற்பது போல திமுகவில் சேர்ந்த பிறகு இவரும் பங்கேற்றார்!

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நடிகமணி டி.வி. நாராயணசாமி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போன்றோர் கலந்துகொள்வது போல இவரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்தக் காலக் கட்டங்களில் எம்ஜிஆர் பிரசித்தி பெற்ற நடிகர் என்பதால் அவருடைய கழக ஈடுபாட்டைக் கண்டு மாநாடுகளில் அவர் பேச வரும்போது அதிக ஆரவாரம் எழும்!

எம்ஜிஆர், இயக்கத்தைப் பயன்படுத்தி, கலைத் துறையில் வளர்ந்தார்! இந்த இயக்கம் கண்ட போராட்டக் களங்களில் பங்கேற்றதில்லை! அண்ணாவே கலைஞர்களுக்கு விதிவிலக்கு அளித்து விடுவார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, நாடே அமளி துமளியாகியபோது, கோவாவுக்கு அருகிலுள்ள கார்வார் கடற்கரையில் ஜெயலலிதாவோடு படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்தான் எம்ஜிஆர்!

எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தான் தி.மு.க. ஜெயித்தது; அதனால் அண்ணா முதலமைச்சர் ஆனார் எனக் கூற முடியாது! தி.மு.க. முதன்முதலில் தேர்தல் களம் கண்டது 1957 ஆம் ஆண்டு! என்ன ஆனது? 15 இடங்களைத்தானே கழகம் கைப்பற்றியது! அடுத்த தேர்தல் 1962 ஆம் ஆண்டு! எம்.ஜி.ஆர். தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்; காஞ்சியில் அண்ணாவுக்காக பல பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார்; என்ன ஆனது? அண்ணாவின் வெற்றி தட்டிப் பறிக்கப்பட்டதே!

ஏறத்தாழ 50 இடங்களில் கழகம் வென்றது; கழகம் வென்ற இடங்களில் எம்.ஜி.ஆர். பிரச்சாரத்துக்குப் போகாத தொகுதிகளும் உண்டு!

1967 தேர்தலில் கழகம் வென்றது என்றால் அதற்கு அண்ணா வகுத்த வியூகம், தேர்தலுக்கு முன் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் கழகத் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஏற்ற, தியாகத் தழும்பு இவைகள் முக்கியக் காரணங்கள் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் பல நேரங்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளனர்! என்று முரசொலி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.