கடைசி டி20 போட்டி; இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.…

இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது.  இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

தொடரை வென்று விட்டதால் இனி கடைசி ஆட்டத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி இல்லை. எனினும் அணியில் ஒரு சில மாற்றங்களை செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. இதன்படி துணை கேப்டன் லோகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோருக்கு களம் காண வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. சூப்பர் பார்மில் உள்ள சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் ஜொலிப்பாரா? என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான். எனவே வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள்.

தென்ஆப்பிரிக்க அணியை எடுத்துக் கொண்டால் கடந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், குயின்டான் டி காக் ஆகியோர் பேட்டிங்கில் கலக்கினர். ஆனால் அணியின் கேப்டனின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. அதே போல் பந்து வீச்சாளர்கள் ரபடா, அன்ரிச் நோர்டியா ஆகியோரும் பார்முக்கு திரும்ப வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் தென்ஆப்பிரிக்கா அணிக்கும் இது தான், உலக கோப்பை போட்டிக்கு முந்தைய கடைசி 20 ஓவர் போட்டியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.