இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கேரள பெண் யார்?

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் கேரளா மாநிலம் இடுக்கியின் கஞ்ச்குஷி பஞ்சாயத்தைச் சேர்ந்த சௌமியா (31) என்பவர் உயிரிழந்துள்ளார்.…

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் கேரளா மாநிலம் இடுக்கியின் கஞ்ச்குஷி பஞ்சாயத்தைச் சேர்ந்த சௌமியா (31) என்பவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் வான்வெளி தாக்குதலாக 130 சிறிய ரக ஏவுகணைகளை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சௌமியா என்ற பெண் ஏவுகணையிலிருந்து வெடித்த சில பாகங்கள் அவர் வசித்துவந்த கட்டடத்தின் மீது விழுந்ததில் கட்டடம் இடிந்து அதில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து இந்தியாவிற்கான இஸ்ரேலின் தூதர் ரான் மல்கா தன்னுடைய ட்விட்டர் பதிவில் “ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலில் பலியான சௌமியா சந்தோஷின் குடும்பத்தினருடன் நான் பேசினேன். உயிரிழந்த சௌமியாவின் 9 வயது மகன் அடோனி இவ்வளவு இளம் வயதில் தாயை இழந்துவிட்டார், அவள் இல்லாமல் வளர வேண்டியிருக்கும்.

இந்த தாக்குதல் 2008 மும்பை தாக்குதலில் பெற்றோரை இழந்த இரண்டரை வயது சிறுவன் மோசேயை நினைவூட்டுகிறது, கடவுள் அவர்களுக்கு பலத்தையும் தைரியத்தையும் தருவார், சௌமியாவின் இழப்புக்கு இஸ்ரேல் நாடு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது” என குறிப்பிட்டிருந்தார்.

உயிரிழந்த சௌமியா சந்தோஷ் இஸ்ரேலில் அஷ்கிலான் நகரில் வசித்து வந்துள்ளார். அவர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மூதாட்டி ஒருவருக்கு பராமரிப்பு பணிகளை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று சௌமிய தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது 24 மணிநேரத்திற்கும் மேலாக இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய படைகளால் சுடப்பட்ட நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளில் ஒன்று அவரது இல்லத்தைத் தாக்கியதில் கட்டிடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி சௌமிய உயிரிழந்தார். இந்த தாக்குதலில் காசாவில் பகுதியில் மட்டும் குறைந்தது 35 பேரும் இஸ்ரேலில் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.

COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் உலகம் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான இந்த தாக்குதல் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.