இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். 70களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் இந்தி பாடல்களின் தாக்கம் பெரிய அளவில் இருந்த சமயத்தில், தனது ஆர்மோனிய பெட்டியுடன் வந்து மொத்த தமிழ் மக்களையும் தன் இசையால் கட்டிப்போட்டார் இந்த பண்ணைபுரத்துக்காரர்.
அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் பல தலைமுறைகளை கடந்து இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.அரை நூற்றாண்டு காலமாக தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒன்றாக மாறியிருக்கிறார் இளையராஜா. காதல், மகிழ்ச்சி, துக்கம், குதூகலம், சோகம் என அனைத்திற்கும் ஒரே அருமருந்து இசைஞானியின் இசையாகவே இருக்கிறது.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,இந்தி என மொத்த இந்தியாவையும் தனது இசையால் ஈர்த்தார் இசைஞானி.100 வருட இந்திய சினிமாவில் இந்தியாவின் ஆக சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார் ராஜா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
80களில் பெரும்பாலான படங்களின் அடையாளமாக திகழ்ந்தார் இளையராஜா. சுமாரான படங்கள்கூட இளையராஜாவின் இசையால் பெரிய ஹிட் அடித்துள்ளது. இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை அணுகும் முன்பாக இசைஞானியை அணுகிய வரலாறுகள் ராஜாவின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
இசை என்பது யாருக்கும் சொந்தமானது இல்லை, தகுதியும் திறமையும் இருந்தால் யாரும் சாதிக்கலாம் என்று பலருக்கும் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் ராஜா. “கோட்டையில்லை கொடியுமில்லை எப்பவும் நீ ராஜா” என்ற அவரது பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு என்றும் அவர் ராஜாவாகவே உள்ளார்.
– சந்தோஷ்