“குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா?” – ஜகதீப் தன்கர் கேள்வி!

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, துணை குடியரசுத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவை பயிற்சியாளர்கள் குழுவிடம் பேசிய அவர்,

“சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் குடியரசுத் தலைவருக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கே போகிறோம்?. நாட்டில் என்ன நடக்கிறது?. நாம் மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். குடியரசுத் தலைவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார். இல்லையென்றால் அது சட்டமாகிறது.

சட்டம் இயற்றும், நிர்வாக பணிகளை செய்யும், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படும் நீதிபதிகள் நம்மிடம் உள்ளனர். ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. ஆனால் அவர்களுக்கு எந்த பொறுப்புணர்வும் இல்லை. ஏனெனில் இந்நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது. குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடும் அளவிற்கு என்ன சூழல் தற்போது உருவாகியுள்ளது.

அரசியலமைப்பின் கீழ் நீதிபதிகளுக்கு உள்ள ஒரே உரிமை, பிரிவு 145(3) இன் கீழ் அரசியலமைப்பை விளக்குவது மட்டுமே. ஆனால் பிரிவு 142 ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல உச்ச நீதிமன்றம் மாற்றி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.