தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான கேள்விக்கு விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தளர்வுகள் எதுவும் இல்லாமல் மீண்டும் பழைய நிலைமையில் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாட உள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் செவ்வாய்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் வரும் 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், வரும் 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர். எனவே இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.







