இருவேறு நாடுகளிடையே பரபரப்பாக நடைபெற்றுவரும் ஒரு போரின் போது மழை
குறுக்கிட்டால் அது பெரிதும் கருத்தில்கொள்ளப்படமாட்டாது. ஆனால் இருவேறு
நாடுகள் விளையாடும் போது அங்கு மழை குறிக்கிட்டால் அந்த ஆட்டம் தடைபட்டு, அது
பெரும் பேசுப்பொருளாகக் கூடும்!
அதிலும் குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் தடை படுமாயின், எகோபித்த
ரசிகர்களின் ஏக்கத்திற்கு உள்ளாகிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
பொதுவாகவே இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளின் போது இரு அணிகளின் ஆதரவாளர்களும், தங்கள் அணி வெற்றி பெறவேண்டும் என வேண்டுதல் வைப்பதுடன், போட்டியின் போது மழை குறுக்கிட கூடாது என்பதற்காகவும் வேண்டுதல் வைப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.

சரி, அதற்கான தேவை என்ன என கேட்கிறீர்களா? உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று இன்று முதல் தொடங்கிவிட்டது. இன்றைய ஆட்டங்களில் போட்டியை நடத்தும்
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணியையும், இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான்
அணியையும் எதிர்கொண்டது. இவ்விரு போட்டிகளிலும் நியூசிலாந்து மற்றும்
இங்கிலாந்து அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். நாளை
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெறவுள்ள போட்டிகளில் முதல் போட்டியில்
இலங்கை, அயர்லாந்து அணிகள் மற்றும் இரண்டாவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான்
அணிகள் மோதவுள்ளன.
உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியானது, டிக்கெட்
விற்பனையை தொடங்கிய 10 நிமிடங்களிலேயே சுமார் 90,000 டிக்கெட்டுகளும் விற்று
தீர்ந்ததாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி சுவாரஸ்யம் கூட்டியுள்ளன. மேலும்
நாளை நடைபெறும் போட்டியானது இந்திய அணிக்கு நல்ல தொடக்கமாக அமைய வேண்டி பல்வேறு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.
ஆனால் இதில் இருக்க கூடிய பெரிய சிக்கல் என்னவென்றால், ஆஸ்திரேலிய நாட்டு
வானிலை மைய அறிவிப்பின் படி, நாளை நடைபெறவுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் போது 90% கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவே இரு அணிகளின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தும் செய்தியாக பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, மழை அன்றி போட்டி நடத்தப்பட்டால் அது தீபாவளி
பரிசாகத்தான் இருக்க கூடும். இரு அணிகளும் வெகு தீவிர வலைப்பயிற்சியில்
ஈடுபடுவதோடு, மனதளவிலும் தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய அணிக்கு இந்த தொடர் மிக முக்கியமான ஒரு தொடராகும். பல்வேறு
விமர்சனங்களுக்கு பின்பு விராத் கோலியிடம் இருந்து கேப்டன் பொறுப்பு ரோஹித்
சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை கட்டி காப்பாற்றி வருகிறாரா ரோஹித்
ஷர்மா என்பதற்கான சாட்சியங்கள், சமீப கால வளர்ச்சியில் வெட்டவெளிட்சமாகி
உள்ளது.
ரோஹித் தலைமையிலான இந்திய அணி
இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வருபவர் ரோஹித் ஷர்மா, மற்றும் அவருக்கு துணை கேப்டனாக செயல்பட்டு வருபவர் கே எல் ராகுல். கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை நம்மால் மறக்க இயலாது. அதன்பின்னர் விராத் கோலி வகித்து வந்த கேப்டன் பதவி ரோஹித் வசம் மாறியதன் பின்பு, இந்திய அணியில் உள்ள ஓட்டை ஒடசல்கள், கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யபட்டு தற்போது வலுவான டாப் ஆர்டரும், சுமாரான லோயர் ஆர்டரும் கொண்டு விளையாடி வருகிறது.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ரோஹித் ஷர்மா முழு நேர கேப்டனாக
பொறுப்பேற்றது முதல் இந்திய அணி டி20 தொடர்களில் பெற்ற வெற்றியின் விகிதங்களை
பார்க்கும் பொழுது, மொத்தம் 35 டி20 போட்டிகளில் 23 வெற்றிகளும், 7 தோல்விகளும் அடைந்துள்ளது. சராசரியாக பார்க்கிற பொழுது வெற்றி விகிதம் 75 சதவிகிதத்திற்கும் மேல்தான் உள்ளது.
இருப்பினும் கடந்த ஆசிய கோப்பை டி20 தொடர் இந்திய அணிக்கு மறக்கப்பட வேண்டிய
மோசமான தொடராக அமைந்தது. ஆனால் விராத் கொழிக்கு மட்டும் அது அவரது பார்மை
மீட்டெடுக்க சிறந்த தொடராகவே அமைந்தது. அதன் பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய தொடர் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர்களில் வெற்றி பெற்றது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. எனவே இந்திய அணிக்கு இந்த டி20 தொடரில்
கோப்பைக்கான வாய்பாகவே அமையக்கூடும் என்பதில் ஒருவித சந்தோசம் ரசிகர்களிடையே பூத்துள்ளது.
இந்திய அணியின் டாப் ஆர்டர்
கடந்த சில டி20 தொடர்களை எடுத்து பார்க்கின்ற பொழுது, இந்திய அணியானது சிறந்த
டாப் ஆர்டர்களை கொண்டு விளையாடி இருக்கிறது. பவர்பிளே ஓவர்களில் முக்கியத்துவம் செலுத்தி விளையாடுவது, முதல் 10 ஓவர்களில் ரன் சேர்க்கும் விதம், முதல் 4 விக்கெட்டுகளுக்கான பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவம் இவற்றை உணர்ந்தே இந்திய அணி செயல்படுகிறது. ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், விராத் கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என உலகின் தலைசிறந்த பேட்டர்களை கொண்டு களமிறங்கும் இந்திய அணியில் டாப் ஆர்டர்களை பொறுத்தமட்டில் எவ்வித ஐயமும் இல்லை.
கே எல் ராகுல் அவர் விளையாடிய கடைசி 10 டி20 போட்டிகளில் 4 அரைசதங்கள் விளாசி
இருக்கிறார். சூர்ய குமார் யாதவ் அவர் விளையாடிய 10 சர்வதேச டி20 போட்டிகளில்
5 அரை சதங்களை அடித்துள்ளார். விராத் கோலி சமீபத்தில் கம் பேக் கொடுத்திருக்கும் நிலையில் கடைசி 10 டி20 போட்டிகளில் 3 அரை சதங்களும், 1 சதமும் அடித்து, 141.63 ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் விளையாடி 364 ரன்கள் குவித்துள்ளார். எனவே இந்திய அணியின் டாப் ஆர்டர் என்பது வலுவான மற்றும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வல்லாதாகவே உள்ளது.
மிடில் ஆர்டர்களின் ஆதிக்கம்
இந்திய அணியின் மிடில் ஆர்டர்களாக பார்க்கப்படும் ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் மீதான கவனம் என்பது அணியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் பொருட்டு அமைந்துள்ளது. குறிப்பாக முதல் பேட்டிங்கின் போது ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு, அணிக்கு டெத் ஓவர்களில் ரன் குவிப்பில் கவனம் செலுத்தும் வகையிலும், தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு என்பது இரண்டாவது இன்னிங்ஸில் பினிஷார் ரோலுக்கு எடுப்பாகவும் அமையபெற்றுள்ளது.
சமீப காலமாக தனக்கு இந்திய அணியில் கிடைத்திருக்கும் வாய்ப்புகளை தினேஷ்
கார்த்திக் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இக்கட்டான சூழல்களில்
ஆட்டத்தின் தன்மையை மாற்றும் வல்லமை கொண்ட எம் எஸ் தோனியின் செயல்பாடுகளை போலவே, நம்பிக்கைக்குரிய பினிஷராக செயல்பட்டு வருகிறார் தினேஷ் கார்த்திக்.
சந்தேகத்திற்கு இடமாகியிருக்கும் பந்துவீச்சு
ஆசிய கோப்பை டி20 தொடரின் போது இந்திய அணியின் பந்துவீச்சுக்கான தேடல் இருந்து
வந்த நிலையில், இறுதி வரை அது தேடலாக மட்டுமே அமைந்துவிட்டது. இந்தியாவின்
பெரும் நம்பிக்கையான ரவீந்திர ஜடேஜா, ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயம்
ஏற்பட்டதால் விலகியதை அடுத்து, இந்திய அணிக்கு பந்துவீச்சில் பெரும் பின்னடைவு
ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஆடுகலங்கள் ஸ்விங்கிற்கு பெரிதும் உதவாத நிலையில்,
புவனேஷ்வர் குமார் மற்ற அணிகளின் டார்கேட்டில் நிச்சயம் நிற்பார். தற்போது ஒரு
வருடம் கழித்து அணிக்கு திரும்பியுள்ள முகமது ஷமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான
பயிற்சி போட்டியில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியை
தருகின்ற அதே வேளையில் இந்தியாவுக்கு தற்போதைய ஒரே நம்பிக்கையாக இருக்கிறார்.
மேலும் அவ்வபோது இந்திய அணிக்கு பக்கபலமாக விளங்கிவரும் ஹர்ஷல் படேல்,
ஹர்ஷ்தீப் சிங், சஹால், தீபக் ஹூடா உள்ளிட்டோர் எதாவது தந்திரங்களை
நிகழ்த்தினாலே ஒழிய அது இந்திய அணிக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கக்கூடும். அதே
சமையம் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டர்களாக ரவிச்சந்திரன்
அஷ்வின் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்கு ஆகசிறந்த பங்கை அவ்வபோது
அளிக்க கூடுவது இன்னும் வலு சேர்க்கிறது.
நாளைய போட்டியின் மீதான கணிப்பு
எது எப்படியாயினும் நாளைய போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் உள்ள
மைதானத்தில் இந்திய நேரப்படி சரியாக மதியம் 12:30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.
ஆசிய கண்டங்களில் உள்ள மைதானங்களில் டாஸ் வெல்லும் அணியே போட்டியை வெல்லும் என்ற நிலை மாறி, தற்போது சிறப்பாக விளையாடும் அணியே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்றாகியிருக்கிறது. எனவே நாளை மழை குறிக்கிடாமல் போட்டி நடைபெற்றால் வெற்றி கணிப்புகள் அடிப்படையில் இந்திய அணிக்கே 60 சதவிகித வெற்றி வாய்ப்பானது உள்ளது.
ஆம் வானிலை பொறுத்தவரை மெல்போர்ன் மைதானம் மழைக்கான அறிகுறி இருப்பதால் நாளை முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஹர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. காற்றின் வேகம் ஒத்துழைத்தால் புவனேஷ்வர் குமாருக்கு நல்ல போட்டியாக நாளை அமையக்கூடும். அதே சமையம் ஷமியும் நல்ல வேகத்தில் பந்துகளை புல்லர் லெந்த்களில் போடக்கூடியவர். எனவே பாகிஸ்தான் பேட்டர்களை முடிந்த அளவு
வடப்படுத்திவிட இந்தியா கவனம் செலுத்தும்.
அதே போல இந்தியாவின் பேட்டர்களை அச்சுறுத்தும் வல்லமை கொண்ட அணியாக பாகிஸ்தான் இருக்கிறது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. குறிப்பாக காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஷாஹீன் அப்ரிதியின் வேகம் இந்திய பேட்டர்களுக்கு
நிச்சயம் சவால் வாய்ந்ததாக அமையும். அதே போல முகமது ஹாஷ்னானி, ஹாரிஸ் ராப்,
நசீம் சஹா என சிறந்த பந்துவீச்சை கொண்டுள்ளது பாகிஸ்தான்.
எனவே நாளைய போட்டியின் வெற்றி தோல்வி என்பது, மழையை பொறுத்ததாகவும்,
பந்துவீச்சை பொருததாகவுமே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஆசிய
கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும், இரண்டு
அணிகளும் 1-1 என தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி கண்டுள்ளது.
-கட்டுரையாளர், நாகராஜன்










