லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு, நடிகர் சஞ்சய் தத் அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவ்வப்போது வரும் சில அப்டேட்டுகளால் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்கிறார்.
படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு வேடங்களில் லியோ என்ற கதாபாத்திரத்துக்கு நடிகை த்ரிஷாவும், பார்த்திபன் என்ற கதாபாத்திரத்துக்கு நடிகை பிரியா ஆனந்த்-ம் ஜோடியாக நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்க்கு தந்தையாக நடிகர் சஞ்சய் தத் நடித்திருப்பதாக இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிகட்ட படப்பிடிப்புக்கு பிறகு அக்டோபர் 19-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.







