முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் வணிகம்

காசு, பணம், துட்டு… புழக்கத்தில் குறைகிறதா ரூ.2000?

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் புழக்கத்தில் குறைக்கப் பட்டுள்ளதாகவும் வேகமாக பரவி வருகின்றன, விறுவிறு தகவல்கள்! உண்மைதானா?

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பரில், தொலைக்காட்சி வழியே பேசிய பிரதமர் மோடி, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார் அதிரடியாக! மாற்றாக புதிய ஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. பழைய நோட்டுகளை வங்கிகள் வழியே மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது, ரிசர்வ் வங்கி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்காக, அந்த காலகட்டத்தில் வங்கி கிளைகளின் வாசலில் பொதுமக்கள் தவம் கிடந்ததெல்லாம் பழங்கதை. ’நாட்டுக்காக கொஞ்சம் சிரமப்பட்டாதான் என்னங்க?’ என்றார்கள் அப்போது. வழக்கம் போல எதையும் தாங்கும் இதயம் கொண்ட நம்மக்கள், இதையும் தாங்கினார்கள், பெரும் வலியாக!

கடந்த சில மாதங்களாக, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை என பொதுமக்களும், வர்த்தகர்களும் கூறி வருகின்றனர். இதனிடையே, ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளை மேற்காட்டி வரும் தகவல்கள், கால் பங்குக்கு மேல், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுவிட்டதாகவும் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றன.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சமீபகாலமாக குறைந்து வருகின்றன. வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் கேட்டாலும் கொடுப்பதில்லை என்கிற பொதுமக்களின் புகார்கள் உண்மை என்பதை வெளிப்படுத்து கின்றன ஆய்வறிக்கைகள்.

2017-18 ஆம் நிதியாண்டில் புழக்கத்தில் இருந்த 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 33,630 லட்சம் 2021 ஆம் ஆண்டு 27 சதவீதம் குறைந்து 24,510 லட்சமாக இருந்தது. அதே போல் 2 ஆயிரம் ரூபாய் அதிக அளவு புழக்கத்தில் இருந்தபோது மொத்த 2 ஆயிரம் ரூபாய்களின் மதிப்பு, 6.72 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது, சுமார் 2 லட்சம் கோடி அளவு குறைந்து, ரூபாய் 4.90 லட்சம் கோடியாக உள்ளது.

மேலும் தற்போது புழக்கத்திலிருந்து அரசால் திரும்பப்பெற்றதாகக் கூறப்படும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 9,120 லட்சம், இதன் மொத்த மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடி. இன்னொரு புறம் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரிக்கிறது. ரூபாய் நோட்டுகளின் மொத்த தொகையில், 500 மதிப்புள்ள நோட்டுகளின் பங்கு 2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 19.8 சதவீதத்திலிருந்து 2020 மார்ச் வரை 25.4 சதவீதமாகவும், மார்ச், 2021 வரை 31.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இந்த உயர் மதிப்புள்ள நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கு வராததால் ரிசர்வ் வங்கி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. ஏடிஎம்களில் முன்பு இருந்ததைப் போல 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் மக்கள் பெறவில்லை. இந்த செய்திகளையும் தகவல்களையும் ஆராயும் போது மீண்டும் கருப்புப் பணப் பதுக்கலில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்கள் நிபுணர்கள்.

’அப்படின்னா, மீட்டெடுப்போம் பல லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணத்தை’ என்ற முழக்கம் மட்டுமே நிரந்தரமாக இருக்கும் போலிருக்கிறது.

தங்கபாண்டியன் ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Jeba Arul Robinson

மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!

Halley Karthik

பொக்கிஷங்கள் நிறைந்த பவழக்குன்று

Halley Karthik