முக்கியச் செய்திகள் இந்தியா

மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பா ?

மகாராஷ்டிராவில் குதிரைபேர அரசியல் தொடங்கியுள்ள நிலையில் அங்கு பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி வரும் எனத் தெரிகிறது. ஒருவேளை பாஜகவிற்கு பெரும்பான்மைக்கு தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைக்காத பட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் சிவசேனா கட்சியில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்தது. இதனை மோப்பம் பிடித்த பாஜக, அவரை தற்போது தன்வசம் ஈர்த்துள்ளது. ஷிண்டே தலைமையில் 33 எம்.எல்.ஏ.,க்கள் தற்போது குஜராத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  முதலில் ஏக்நாத் ஷிண்டேவுடன் 13 எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அவருடன் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்களின் பட்டியல் முழுமையாக வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் 33 எம்.எல்.ஏ.,க்கள் அவருடன் கை கோர்த்திருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் சில எம்.எல்.ஏ.,க்கள் கை கோர்க்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான சிவசேனா மற்றும் ஆதரவு தந்த சிறிய கட்சி, சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மொத்தம் 33 பேர் பாஜக ஆளும் குஜராத்தின் சூரத் நகரில் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலகக் குரல் எழுப்பியுள்ள ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற நிபந்தனையை முன்வைக்க வாய்ப்பிருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக 106 உறுப்பினர்களையும், சிவசேனா 55 உறுப்பினர்களையும், தேசியவாத காங்கிரஸ்-51 உறுப்பினர்களையும் காங்கிரஸ் 44 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. இதர கட்சிகள், சுயேட்சைகள் என 29 பேர் உள்ளனர்.

இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 145 எம்.எல்.ஏக்கள். சிவசேனா தரப்பில் இருந்து 13, இதர கட்சிகள், சுயேட்சைகள் 20 என மொத்தம் 33 பேர் இப்போது பாஜக ஆதரவு நிலையில் உள்ளனர். பாஜகவு ஆட்சி அமைக்க இன்னமும் சில எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்னொரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க தமது பக்கம் 37 சிவசேனா எம்.எல்.ஏக்களை இழுக்க வேண்டும். இப்படியான நிலையில் மகாராஷ்டிராவில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை பாஜக வலியுறுத்துவதில் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. சிவேந்திரராஜி போஷ்லே, மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு விரைவில் அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குதிரை பேரம்

சிவசேனா கட்சியில் முதல்வர் உத்தவ் தாக்ரே குடும்பத்தின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. முதல்வரின் மகனின் செயல்பாடுகளால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இதனால் உட்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பாஜக, தமது குதிரை பேர அரசியலை தொடங்கியது. இதில் அமைச்சர் ஏக்நாத் ஷின்டே விழுந்தார். அவரை வைத்து அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை பாஜக வளைத்துள்ளது.

இந்த நிலையில், சிவசேனா தலைவர் மிலிந்த் நர்வேகர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னுடன் 33 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும், பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தம்முடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் லிஸ்டையும் வெளியிட்டுள்ளார். அதில் தொர்வே மகேந்திரா, கொகாவலே பாரத், டால்வி மகேந்திரா, பாபர் அனில், ஷிண்டே மகேஷ், பாட்டில் சஹாஜி, தேசாய் ஷாம்புராஜ், கல்யான்கர் பாலாஜி, சவுகுலே யான்ராஜே, பொர்னாரே சந்திபான், சத்தார் அப்துல், தேஷ்முக் நிதின் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, ஏக்நாத் ஷின்டேவிற்கு முதலமைச்சர் பதவியையும் விட்டு கொடுக்க தயார் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஆனால் இதனை அதிருப்தியாளர்கள் ஏற்க தயாரில்லை எனத் தெரிகிறது. மேலும் , மறைந்த தாக்ரேவின் கனவுகளை நனவாக்குவோம், மண்ணின் மைந்தர்களான மகாராஷ்டிரா மக்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என ஷின்டேவுடன் கைகோர்த்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். இவர்கள் அனைவரும் குஜராத்தில் இருந்து அசாமிற்கு செல்லவுள்ளனர்.  தற்போதுள்ள அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 40யை தாண்டும் எனத் தெரிகிறது.

இராமானுஜம்.கி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மே-3ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை : புதுச்சேரி அரசு

Ezhilarasan

ஷங்கர் படத்தில் ராம் சரண் சம்பளம் இவ்வளவு கோடியா?

Halley Karthik

மாணவி தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Halley Karthik