மீண்டும் தலை தூக்குகிறதா வெறுப்பு அரசியல்?

தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக திமுக – பாஜக இடையே நடக்கும் வார்த்தைப் போரானது சில இடங்களில் வரம்பை மீறும் வகையில் தனிமனித தாக்குதலாக மாறியுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக ஒரு நாகரீகமான அரசியல் கட்டமைக்கப்பட்டது.…

தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக திமுக – பாஜக இடையே நடக்கும் வார்த்தைப் போரானது சில இடங்களில் வரம்பை மீறும் வகையில் தனிமனித தாக்குதலாக மாறியுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக ஒரு நாகரீகமான அரசியல் கட்டமைக்கப்பட்டது. சித்தாந்த ரீதியாக மட்டுமே மோதிக்கொள்ளும் போக்கிலிருந்து தனிமனித தாக்குதலாக அது மாறியுள்ளது.

கண்ணிய அரசியலை கட்டமைத்த ஸ்டாலின்:

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதுவரை இருந்த இரு துருவ அரசியலுக்கு முடிவுரை எழுதப்பட்டதாக வர்ணிக்கப்பட்டது. அதாவது, திமுகவோ – அதிமுகவோ ஆட்சிக்கு வந்த உடனே, கைது, ஆட்சி மீது ஆவேசமான குற்றச்சாட்டுகள், திமுக ஆட்சிக்கு வந்தால், அதிமுகவின் திட்டங்களை முடக்குவது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவின் திட்டங்களை முடக்குவது என எதிர்துருவ அரசியல் கூர்மை அடையும். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகம் ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற நடந்த முயற்சி என அரசு திட்டங்கள் மீது அரசியல் போர்வை விழுந்தது.

ஆனால், 2021 மே மாதம் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஒரு கண்ணியமான அரசியலைக் கட்டமைத்தார். ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் முன்னாள் சபாநாயகர் தனபாலையும், எதிர்க்கட்சி துணை தலைவரும், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தையும் ஒரே மேசையில் அமர்த்தி தேநீர் அருந்தினார். 2011ல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுக்கு 11-வது வரிசையில் இடம் ஒதுக்கி புறக்கணிக்கப்பட்ட நடவடிக்கைக்கு 2021 ஆம் ஆண்டு ஒரே மேசையில் அதிமுக தலைவர்களை அமர்த்தி அரசியல் நாகரீகத்தைக் கற்றுக்கொடுத்தார் ஸ்டாலின். இதே போலத்தான், சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெறுவதை எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த உடன் தற்காலிகமாக கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் அந்த புகைப்படத்தை அகற்றாமல் இருந்தார். புகைப்படத்தை நீக்காததன் மூலம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உரிய முக்கியத்துவத்தையும், அரசியல் மரியாதையையும் ஸ்டாலின் கொடுத்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக கருணாநிதி – எம்.ஜி.ஆர். அரசியலிலும், கருணாநிதி – ஜெயலலிதா அரசியலிலும் நீடித்த அரசியல் போட்டி ஸ்டாலினின் முயற்சியால் முடிவுக்கு வந்ததாகவும், அது நாகரீக பாதையை நோக்கி பயணிப்பதாகவும் புகழப்பட்டன. ஆனால், அண்மைக்காலமாக, தமிழக அரசியலில் நடக்கும் விவாதங்கள், வார்த்தைப் போர்கள், புகார் குற்றச்சாட்டுகள் தமிழ்நாட்டில் மீண்டும் வெறுப்பு அரசியல் தலை தூக்குகிறதா என்ற பார்வையை நமக்கு கொடுக்கிறது. ஆனால், இந்த முறை, இந்த வெறுப்பு அரசியல் பேச்சுகள், திமுக – அதிமுகவிற்கு இடையில் இல்லை. மாறாக, திமுக – பாஜகவிற்கு இடையே நடக்கிறது.

இளையராஜாவை ஒட்டி எழுந்த சர்ச்சை:

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் “மோடியும் அம்பேத்கரும்” என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வெளியிட்டது. இந்த புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையொட்டி, நடந்த வார்த்தை போர், அண்ணாமலை – திருமாவளவன் வார்த்தைப் போராக மாறியது. தன்னோடு விவாதம் நடத்த திருமாவளவன் தயாரா என்று கூறிய அண்ணாமலை தேதியையும் குறித்தார்.

விளையாட்டுப் போட்டிகளில் கூட படிநிலை என்ற ஒன்று உள்ளது. அதை ஜூனியர், சப் ஜூனியர் என்று அழைப்பார்கள், அண்ணாமலை ஒரு சப்-ஜூனியர். அவரோடு விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஒரு சப் ஜூனியரை அனுப்பி வைக்கிறேன் என்றார் திருமாவளவன். இதற்கு எதிர்வினையாற்றிய அண்ணாமலை, திருமாவளவனின் இடக்கை வலக்கை எல்லாம் வாருங்கள் என்று எழுதியதும் சர்ச்சையை உண்டாக்கியது.

வெறுப்பை உமிழும் தலைவர்கள்:

2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரும் தற்போதைய அமைச்சருமான செந்தில் பாலாஜின் பற்களை உடைப்பேன் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, திமுக எம்.பி. கனிமொழி கூட எதிர்வினையாற்றும் போது கண்ணியமான வார்த்தைகளையே பயன்படுத்தினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட, எடப்பாடி பழனிசாமியோ, மு.க.ஸ்டாலினோ தங்களின் விமர்சனங்களை கண்ணியமாகத்தான் முன்வைத்தார்கள். ஆனால், ஓராண்டு காலம் கழித்து தமிழ்நாடு அரசியலைத் திரும்பி பார்க்கும் போது, இந்த கண்ணியமிக்க நாகரீகமான அரசியல் கரைந்து போய்விட்டது தெரிகிறது.
தன்னிடம் கேள்வி கேட்ட ஒரு செய்தியாளருக்கு பதில் அளிக்காமல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர் கோபாலபுரத்தில் பணம் வாங்கியதாக கடுமையாக விமர்சித்தார். இதே போல, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்த நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து குற்றம்சாட்டினார்.

ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சிறுதொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக தாக்கி பேசினார். உங்களை ஒரு வாரம் சிறையில் அடைத்தால் நீங்கள் காற்றடித்து ஓடிவிடுவீர்கள், என்று அவர் பேச்சில் வெறித்தனமாக குறிப்பிட்டார். நாங்கள் உங்கள் வாலை வெட்டுவோம் என்ற தா.மோ. அன்பரசனின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு போட்டியா, பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கடுமையான வார்த்தைகளில் எதிர்வினையாற்றினர்.
இதே போல், திராவிடர் கழகம் நடத்திய மொழித் திணிப்பு மாநாட்டில் பேசிய திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், இந்தி வளர்ச்சியடையாத மாநிலங்களின் மொழி, என்று பேசினார். இதே போல, கோயம்புத்தூரில் ‘பானி பூரி’ விற்பவர்களின் மொழி இந்தி என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.

வட இந்தியர்களால் தான் கொரோனா பரவல் அதிகரிக்கிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு பேசியதற்கு இரண்டு மணி நேரத்தில் உ.பி. அமைச்சர் கண்டனத்தை பதிவு செய்தார். அதே போன்று தான், டி.கே.எஸ். இளங்கோவனனின் எதிர்ப்புக்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்தன. திராவிட மாடல் வளர்ச்சியை தேசிய அளவில் கொண்டு செல்வோம் என சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரைத்தார். அதன் எதிரொலியாகவே அமைச்சர் பொன்முடிக்கு, அமைச்சர் மா.சுவிற்கு, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு தேசிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தேசிய ஆங்கில ஊடகங்கள்  இந்த விவகாரத்தை விவாதித்தன. ஆகையால், தமிழ்நாட்டு எதிர் துருவ அரசியல் தற்போது தேசிய எதிர்துருவ அரசியலாக மாறியிருக்கிறது.

ஸ்டாலின் கட்டமைத்த நாகரீக அரசியல்:

தொடக்கத்திலேயே குறிப்பிட்டது போல, ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது இருந்த ஒரு நாகரீக அரசியல் தமிழ்நாடு அரசியலில் இருந்து மெல்ல மெல்ல காணாமல் போயுள்ளது. அரசு மீது விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் கட்சிகள் மீது அநாகரீகமான, தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவது போன்ற வார்த்தைகளை பிரயோகிக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக பேசும் பேச்சைக் கடந்து போகாமல், அல்லது அதற்கு சரியான பதிலை அளிக்காமல், வெறுப்பு அரசியலுக்குள் தங்களின் காலை சிக்க வைத்துக்கொள்வது போல் பேசி விடுகிறார்கள். இந்த போக்கு, அண்மைக்காலமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில், அரசும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. அமைச்சர்கள் தங்கள் மீது அவதூறுகளை ஏற்படுத்த நடக்கும் செயல் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். இப்போது சித்தாந்த போர் தேசிய அளவில் எதிரொலிப்பதால் கூடுதல் கவனத்தோடு கையாள வேண்டிய கடப்பாடு ஆளும் திமுக அரசுக்கே இருக்கிறது.

இதே போல், எதிர்க்கட்சிகளும் ஆளும் அரசு மீதான விமர்சனங்களை கடுமையான வார்த்தைகளைத் தாண்டி கண்ணியமான உரையாடலை நிகழ்த்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.