மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து ஜல்சக்தி அமைச்சகம் எந்த ஆணைகளையும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்றும், இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்குமாறும் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13-6 – 2022) கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது திட்டம் தொடர்பான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் விசாரித்து முடிவு செய்யும் வரை ஜல்சக்தி அமைச்சகம் ஒப்புதல் வழங்கக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கவேண்டும்.

17-6-2021 அன்று எழுதிய கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் நீர்த்தேக்கம் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எந்த ஒப்புதலையும் வழங்க வேண்டாம் என்று ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.
2022 மார்ச் 21 அன்று சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு கர்நாடகா அரசு ரூ.1,000 கோடியை ஒதுக்கியதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது.
26-5-2022 அன்று வழங்கிய எனது கோரிக்கை மனுவிலும் இதனை வலியுறுத்தியிருந்தேன். அதனையெல்லாம் மீறி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து ஜூன் 17ம் தேதி நடைபெறும் 16வது கூட்டத்தில் விவாதிக்க முன்வந்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அதன் குடிநீர்த் தேவைக்கும், பாசனத்துக்கும் காவிரி நீரையே பெரிதும் நம்பியுள்ளது என்பதை நீங்கள் முழுமையாக அறிவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.







