நேஷ்னல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையைச் சேர்ந்த 3 உயர் அதிகாரிகள், ராகுல் காந்தியிடம் 3 மணி நேரம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி உள்ளனர்.
நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்குச் சென்று விசாரணையில் ஆஜரானார்.
அவரிடம் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்கத்துறை உதவி இயக்குநர் கேள்விகளை எழுப்பினார். இந்த விசாரணையை துணை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் என இரு உயரதிகாரிகள் கண்காணித்துள்ளனர்.
- நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராகுல் காந்தி அளித்த பதில்கள் அனைத்தும் மற்றொரு அதிகாரி ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எனினும், யங் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள், அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் எந்த அடிப்படையில் யங் இந்தியா நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது உள்ளிட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலை 11.30 மணிக்குத் தொடங்கிய விசாரணை மதியம் 2.30 மணி அளவில் நிறைவடைந்ததை அடுத்து ராகுல் காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
அவரிடம் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமலாக்கத்துறை விசாரணையில் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.






