நடிகர் விவேக் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? மருத்துவர் விளக்கம்

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் கொரோனா தடுப்பூசியால் விவேக் உடல் நிலை மோசமடையவில்லை…

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் கொரோனா தடுப்பூசியால் விவேக் உடல் நிலை மோசமடையவில்லை என்று அவரும் விளக்கம் அளித்துள்ளார்.

திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலை 11 மணியளவில், நடிகர் விவேக் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையைச் செலுத்தினார். அவர் உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்தது. கொரோனா தடுப்பூசியால் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இணைந்து வடபழனி தனியார் மருத்துவமனை வளாகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினர்.

அப்போது பேசிய மருத்துவர், ”காலை 11 மணியளவில் நடிகர் விவேக், சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இதய அடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு ஆன்ஜியோபிளாஸ்டி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எக்மோ மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கிற்கு இதய அடைப்பு ஏற்பட்டதற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை. இதய அடைப்பு ஒரே நாளில் உருவாகாது. இதே மருத்துவமனையில், இதய பாதிப்பு உடைய மற்ற நோயாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்கள் உடல்நிலையில் எந்த பாதிப்பையும் கொரோனா தடுப்பூசி ஏற்படுத்தவில்லை. ஒரே நாளில் யாருக்கும் இதய அடைப்பு ஏற்படாது. தற்போது விவேக்கின் உடல்நிலை அபாயக்கட்டதில் உள்ளது. அடுத்த 24 மணி நேரம் கழித்துத்தான், அவரது உடல்நிலை பற்றித் தெளிவாகக் கூறமுடியும்.’ என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்’ தான் தடுப்பூசிப் போட்டுக்கொண்டால் அதிகமானோர் தடுப்பூசி செலுத்துவர் என்பதற்காகத்தான் அவர் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். மேலும் தடுப்பூசி தொடர்பாக அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது கவலை அளிக்கிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி காரணமாக அவருக்கு இதய பாதிப்பு ஏற்படவில்லை. இதய நோயாளிகள், உடல் பருமனாக இருப்பவர்கள், வயது முதிர்ந்தோர், நீரிழிவு நோய் உள்ளவர்கள்தான் முதலில் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கொரோனா வழிகாட்டுதல் நடைமுறை கூறுகிறது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை.” என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.