முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

பெருவெள்ளத்திற்கு பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமா?


நெப்போலியன்

காலநிலை மாற்றம் மற்றும் அதனை எதிர்கொள்ள நாம் என்ன செய்ய போகிறோம் என்பதே உலக நாடுகள் முன் வைக்கும் முக்கிய கேள்வி. நாட்டின் வளர்ச்சி, பொருளாதார நிலை, தொலைநோக்குத் திட்டங்கள் இவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காலநிலை மாற்றங்கள் சார்ந்த திட்டங்களுக்கும் உலக நாடுகள் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

இயற்கை கொடை மேற்கு தொடர்ச்சி மலை

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வறட்சி, பெருவெள்ளம், வெப்ப மண்டல புயல்கள், சுனாமி, அனல் காற்று போன்ற இயற்கை பேரிடர்களால் தீப கற்ப இந்தியா பாதிப்பிற்கு உள்ளாவது தொடர் கதையாக மாறி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதீத கனமழையின் காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருந்தாலும் கூட கடந்த 2018ல் கேரளாவை புரட்டி போட்ட பெரு வெள்ளம் இன்னும் நம் கண் இமைகளை விட்டு நீங்கவில்லை என்பதே உண்மை.

வீடு, உடைமை, உறவுகளை இழந்து நிர்கதியாக கேரளம் நின்றபோது, இயற்கையை நாம் என்ன செய்ய முடியும்? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்திருந்த போதிலும் இத்தகைய பெருவெள்ளத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றது மத்திய அரசு.

உண்மையில் இந்த அளவிற்கு கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கன மழைக்கு வானிலை மாற்றங்கள் மட்டுமே காரணமா என்கிற கேள்வியை நாம் சூழலியல் குறித்து ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், வானிலை ஆய்வாளர்களிடம் முன்வைக்கும்போது, அவர்கள் கூறும் தகவல்கள் நம்மை திடுக்கிட செய்கிறது.

பன்மடங்கு அதிகரிக்கும் மனித சுரண்டல்கள்

கேரளாவின் கடைக்கோடி தெற்குப் பகுதியிலிருந்து கேரளா, கொங்கன் மலை தொடர், கர்நாடகா, மகாராஷ்டிரா என தெற்கு குஜராத் வரை மேற்கு தொடர்ச்சி மலை தனது இயற்கை எழில் கொஞ்சும் இருப்பிடத்தை கொண்டுள்ளது.

குறிப்பிட்ட சில நாட்களில் ஏற்படும் வானிலை மாற்றங்களால் தொடர்ந்து பெய்யும் அதீத கனமழை மட்டுமே பெருவெள்ளத்திற்கும் நிலச்சரிவிற்கும் காரணம் இல்லை எனக் கூறும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் ஒட்டுமொத்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மனிதர்களின் ஆக்கிரமிப்பு தலைதூக்கி இருப்பதும், காடு மற்றும் மலைகளை அழித்து மக்கள் குடியேறுவதோடு எண்ணற்ற தொழிற்சாலைகளை மலைப்பகுதிகளில் கொண்டு வந்ததே இந்த அளவிற்கு மாற்றம் ஏற்படக் காரணம் என கூறுகின்றனர்.

மலையை கரைக்கும் கல்குவாரிகள் என்னும் பேர் ஆபத்து

மேற்கு தொடர்ச்சி மற்றும் கொங்கன் மலை பகுதிகளில் மட்டும் ஏறத்தாழ 5000 குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும், இதில் 1000 கல் குவாரிகள் மட்டுமே முறையான அனுமதி பெற்று செயல்பட்டு வருவதாகவும், அதிகாரப்பூர்வமாக கனிமவள ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்கள் நம்மை திக்குமுக்காட செய்கிறது.

மனித சுரண்டல்களை தடுக்க என்ன செய்யப்போகிறோம்

நாட்டின் வளர்ச்சிக்காக ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அதீத கவனம் செலுத்துகிறது மத்திய அரசு. காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்களால் இயற்கைக்கு ஏற்படும் பேராபத்துகளை தடுக்க என்ன மாதிரியான திட்டங்களை கையில் வைத்துள்ளது என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மனித சுரண்டல்களை இனியும் தடுக்காவிட்டால் கேரள பெருவெள்ளம் பார்ட் – 2, பார்ட் – 3 இப்படி சொல்லிக்கொண்டே போகும் நிலை உருவாகும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள். தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்த எண்ணற்ற திட்டங்களை விடாமுயற்சியோடு கொண்டு வரும் மத்திய அரசு இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசங்களின் மீது பன்மடங்கு கவனமும், பார்வையும் வைக்க வேண்டும் என்பதே சூழலியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

(தொடர்ச்சி நாளை)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram