ஐஏஎஸ் அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பணியாளர் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், நகரமன்ற பணியாளர்களுக்காஜ சி மற்றும் டி பிரிவுகளை ஒன்றாக சேர்க்கும்படி கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி உத்தரவிட்டது. 2 மாதங்களில் இதற்கான திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனினும், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததால், பணியாளர் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முந்தைய நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரிகளான ராகேஷ் சிங், அர்ச்சனா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
நீதிமன்றத் தீர்ப்பு நிறைவேற்றப்படாததற்கு இந்த இரு அதிகாரிகளே காரணம் என பணியாளர் கூட்டமைப்பு தரப்பில் வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 15 நாட்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு விடும் என்றும் கூறினார்.
இரு தரப்ப வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உரிய மரியாதை அளிக்காத நிலை தொடருவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஐஏஎஸ் அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.