உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்

சாதி, மதங்களால் ஏற்படும் மோதல், இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல், இருநாடுகளுக்கு இடையேயான மோதல், மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையிலான மோதல் என, பல்வேறு மோதல்களையும், அதனால் அழிந்த கோடிக்கணக்கான உயிர்களையும் கண்டது இந்த பூவுலகு.…

சாதி, மதங்களால் ஏற்படும் மோதல், இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல், இருநாடுகளுக்கு இடையேயான மோதல், மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையிலான மோதல் என, பல்வேறு மோதல்களையும், அதனால் அழிந்த கோடிக்கணக்கான உயிர்களையும் கண்டது இந்த பூவுலகு. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் அரங்கேறிய நிகழ்வுகள், மீண்டும் ஒரு நெருக்கடியை இந்த உலகம் சந்திக்க உள்ளதாக எச்சரிக்கின்றன.

மே மாதம் இறுதியில், உலகின் தெற்கு பகுதியான அண்டார்டிக்காவில், உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான “ரோன் ஏ-68ஏ” இரண்டாக உடைந்தது. 170 கி.மீ. அகலமும் 25 கி.மீ. அகலமும் கொண்ட இந்த பனிப்பாரை
ஏ-76 என அழைக்கப்பட்டது. புவியின் வெப்பநிலை அதிகரிப்பே பனிப்பாறை உடைய முக்கிய காரணம் என்றும் கூறப்பட்ட நிலையில், இந்த நிகழ்வு சூழலியல் ஆர்வலர்கள் கவனத்தை ஈர்த்தது.

இதேபோன்று, கடந்த ஜூன் 1 ஆம் தேதி ஐஸ்லாந்து கடல் பகுதியில் சுமார் 750 சதுர கிலோமீட்டர் பனிப்பாறைகள் மேற்பரப்பினை இழந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகின. இதேமாதம் இறுதியில், கிழக்கு அண்டார்டிக்காவில் உள்ள அமேரி ஐஸ் படுகையில், ஒரு பெரிய ஏரி திடீரென மறைந்து, 4 சதுர மைல் பள்ளத்தையும், 260 அடி ஆழத்தையும் உருவாக்கி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் தான், ஜூன் மாத இறுதி முதல் ஜூலை மாதம் முதல் பகுதி வரை மனித உயிர்களைக் காவு வாங்க ஆரம்பித்தது வெப்பம். ஜூன் மாத இறுதியில், கனடாவில் வரலாறு காணாத வகையில் 49.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க, வான்கூவர் என்ற நகரில் மட்டும், ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 65 பேர் வெப்பத்தால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ”நாங்கள் அனைத்து ஜன்னல்களுக்கும் கறுப்பு வண்ணம் பூசிவிட்டோம், 24 மணி நேரமும் ஃபேன், ஏசியை ஓட வைத்துக்கொண்டே இருக்கிறோம், வீட்டு கூறைகளின் மேல் ஐஸை நொறுக்கி மூட்டை மூட்டையாக தெளிக்கிறோம்” என்று கூறினர் அப்பகுதி மக்கள்.

மேற்கே ஏற்பட்ட இந்த அதீத வெப்ப அலை, பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் பெரும் காட்டுத்தீயை உருவாக்கியது. பல வாரங்களாக போராடியும் அடங்காத இந்த காட்டுத்தீயால், அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். பல இடங்களில் வெப்பக்காற்று புயலாக உருமாறி ‘நெருப்பு புயல்’ போலக் காட்சியளித்தன.

இதுபோன்று புவி வெப்பமடைவது தொடர்பான நிகழ்வுகள் கடந்த ஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளன. இது இயற்கையானது அல்ல.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்ற ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ, புவி வெப்ப மயமாதலைத் தடுப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகிறது என பேசியது உலகின் கவனத்தை ஈர்த்தது. “உங்களுக்கு எவ்வளவு தைரியம்! இது உங்கள் தவறு, நான் இங்கே இருக்கக்கூடாது, நான் கடலின் மறுபக்கத்தில் பள்ளியில் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் மெத்தனப்போக்கால் பருவநிலை மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்” என்று, 14 வயது க்ரேடா தன்பர்க் பேசியது சாட்டையடியாக விழுந்தது.

சோலார் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகிப்பது தொடங்கி, பூமியையே விட்டு வேறு கிரகத்தில் சென்று வாழ முடியுமா என இடம் தேடும் அளவுக்கு, பருவநிலை மாற்றம் மக்களை வாட்டி வதைக்கிறது. இயற்கையால் மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு, மனிதர்களும் ஒரு காரணம் என உணரும் நாள் வரை, இயற்கை சீற்றங்கள் நம்மை நெருங்கிக்கொண்டே தான் இருக்கும்.

 

கட்டுரையாளர்: பிரபாகரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.