19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் வெற்றிகளைக் குவித்து வரும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் – ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.
தொடரின் தொடக்கத்தில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவிய குஜராத் அணி, டெல்லிக்கு எதிரான அந்த ‘திரில்’ வெற்றிக்குப் பிறகு அசுர பலம் பெற்றுள்ளது. கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் டெல்லியை வீழ்த்தியது.
தொடர்ந்து லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளைத் துவம்சம் செய்த குஜராத் அணி, ஹாட்ரிக் வெற்றிகளுடன் உத்வேகத்தில் உள்ளது. மறுபுறம், 5 முறை சாம்பியனான மும்பை அணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய அந்த அணி, அதன் பிறகு விளையாடிய 4 போட்டிகளிலும் (டெல்லி, ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப்) வரிசையாகத் தோல்வியடைந்தது.




