ஐபிஎல் | கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றை ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் மும்பை  – கொல்கத்தா அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களம் இறங்கிய கொல்கத்தா வீரர்கள் மும்பையின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை தரப்பில் அஸ்வனி குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. மும்பை அணி, 12.5 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ரிக்கெல்டன் 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், மும்பை அணி நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.