ஐபிஎல் தொடர் 2023ல், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 55 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் தலா 54 ரன்களும் அடித்து அசத்தினர்.
இதையடுத்து 204 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அப்துல் சமத் 32 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியின் சஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்று, இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.







