ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 13 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் இறங்கினர். மேத்யூ ஷார்ட் 11 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னில் அர்ஜூன் தெண்டுல்கர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். 3-வது போட்டியில் ஆடிய அர்ஜூன் வீழ்த்திய 2-வது விக்கெட் இதுவாகும்.
தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் சாம் கர்ரன், ஹர்பிரீத் சிங்குடன் இணைந்து விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹர்பிரீத் சிங் 41 ரன்னில் போல்டு ஆனார். சாம் கர்ரன் 26 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஐ.பி.எல். போட்டியில் அவர் அடித்த 3-வது அரைசதம் இதுவாகும். அபாரமாக ஆடிய சாம் கர்ரன் 55 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கி அதிரடியாக ஆடிய ஜிதேஷ் ஷர்மா 25 ரன்களும், ஹர்பிரீத் பிரார் (5 ரன்) கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் 214 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இதைத்தொடர்ந்து கேமரூன் கிரீன், கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் வேகமாக மட்டையை சுழற்றினர். ரோகித் சர்மா 44 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் சூறாவளியாக சுழன்றடித்தார். 38 பந்துகளில் அரைசதத்தை எட்டிய கேமரூன் கிரீன் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். 23 பந்துகளில் அரைசதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 57 ரன்னில் அவுட் ஆனார்.
மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, நேஹல் வதேரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட்டுக்கு 201 ரன்களே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.









