ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணி 182 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அதன்படி முதலாவது குவாலிஃபயர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து இன்று எலிமினேட்டர் சுற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக, கேமருன் கிரீன் 23 பந்துகளில் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 33 ரன்களும் விளாசினர். லக்னோ அணி தரப்பில் நவீன்-உல்-அக் 4 விக்கெட்டுகளும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2ல் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.








