“குழந்தைகளை தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்” – நயினார் நாகேந்திரன்!

இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவினர் குழந்தைகளை பயன்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தேர்தல் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கும் “Zero Tolerance” கொள்கையை மதிக்காமல், மதுராந்தகம் தொகுதியில் பள்ளி மாணவர்களின் கைகளில் தவெக கொடிகளைத் திணித்து, இடைத் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் அவர்களை ஈடுபடுத்திய தவெகவினரின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது “சாக்லேட் வேண்டும் என அடம் பிடிப்பது போல தவெகவிற்கு ஓட்டுப் போடச் சொல்லி பெற்றோர்களிடம் அடம் பிடியுங்கள்” என்று நீங்கள் மறைமுகமாக குழந்தைகளை குறி வைத்ததன் நீட்சி தான், இன்று உங்கள் கட்சிக்காரர்கள் அதே குழந்தைகளை நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். உங்கள் பதவி வெறிக்காக படிக்கும் பிள்ளைகளை இப்படி பரப்புரையாளர்களாக உபயோகப்படுத்துவது அருவருக்கத்தக்க அரசியல் உத்தி.

தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளை உபயோகித்தால் சிறைத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும், குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் (2016 திருத்தம்) – இன் படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தவெக கட்சிக்காரர்கள் மற்றும் அதை அனுமதித்த ஜோசப் விஜய் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.