அழைப்பு… நிராகரிப்பு… வரவேற்பு… மவுனம் – அதிமுகவில் அடுத்தது என்ன?

ஓ.பி.எஸ் அழைப்பு… இ.பி.எஸ் நிராகரிப்பு…, டிடிவி தினகரன் வரவேற்பு… சசிகலா மவுனம் சொல்வது என்ன ? அ.தி.மு.கவில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்…   அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பைத்…

ஓ.பி.எஸ் அழைப்பு… இ.பி.எஸ் நிராகரிப்பு…, டிடிவி தினகரன் வரவேற்பு… சசிகலா மவுனம் சொல்வது என்ன ? அ.தி.மு.கவில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்…

 

அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அதிமுக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (ஆகஸ்டு 18-ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், அதிமுக ஒன்றுபட வேண்டும், மீண்டும் அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.’’ என்றார். நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். அது எதுவாக இருந்தாலும் கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம் என்றார்.

 

மேலும், தானும் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் மட்டும் இன்றி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறிப்பாக டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவில் இணைய வேண்டும் என்றார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீண்டநாட்களாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி என்று புன்னகைத்தபடி பேசத் தொடங்கினார். இந்த இயக்கத்தை சிலர் தன் வசம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அதனை தடுக்கும் போது சில பிரச்சனைகள் உருவாகின்றன.

இரண்டு அணியாக இருந்தவர்கள் 2017-ல் ஒன்றாக இணைந்தோம். அதை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அடிப்படை உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ஆனால், ஜூன் 23-ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டக்கூடாது என காவல்துறைக்கு கடிதம் அனுப்பினார் அண்ணன் ஓ பி எஸ். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அவரே, நீதிமன்றம் சென்று தடை ஆணை கேட்டார் என்று சற்று கோபத்துடன் குறிப்பிட்டார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம் இணைந்து செயல்பட விடுத்துள்ள அழைப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் அடிக்கடி அழைப்பு கொடுப்பார். அவருக்கு எப்போதும் பதவி வேண்டும் இதற்காக இப்படி பேசுகிறார். அவருடைய மகன் மத்திய மந்திரி ஆகவேண்டும். வேறு யாரைப்பற்றியும் அவருக்கு கவலையில்லை. யாருக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினாரோ, அவருக்கும்தான் அழைப்பு விடுத்துள்ளார் என எடப்பாடி கூறினார்.


கட்சி அலுவலகத்தில், ரவுடிகளுடன் புகுந்து தாக்குதல் நடத்தி, முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றார். அவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும் ? அவ்வளவு ஏன் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு ஓ.பி. எஸ் தான் காரணம். அவரது மகன் திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார் என்றார். இருவரின் செய்தியாளர் சந்திப்புகளுக்கு பிறகு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிடுகிறார். அதில், தி.மு.க.வை வீழ்த்துவதற்கு தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். ஆனால், அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வரும் வி.கே.சசிகலா, தற்போது எந்த கருத்தும் சொல்லவில்லை. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தியில் சில கருத்துக்களை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ் பகிரங்க அழைப்பு விடுத்தும் அதை இபிஎஸ் தரப்பு நிராகரித்து, கடுமையாக அவரை சாடியுள்ளது. அதே நேரத்தில், தாங்கள் தனிக் கட்சி தொடங்கி பயணித்து வருகிறோம். அமமுகவின் பொதுச் செயலாளர் நான் உள்ளேன். அதிமுகவில் நடப்பது குறித்து தான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறி வந்த டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸின் அழைப்பை வரவேற்று, பாராட்டியுள்ளார். ஆனால், இபிஎஸ் தரப்பை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளது கவனத்திற்குள்ளாகியுள்ளது.

 

இது குறித்து அதிமுக நிகழ்வுகளை உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள், நான்கு தலைவர்களின் ஆதரவாளார்களிடம் தொடர்பு கொண்டோம். அதன்படி, தற்போதைய சூழலில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மூவரும் ஒர் திசையிலும் இபிஎஸ் மட்டும் தனித்தும் பயணிப்பது தெளிவாகிறது. இதையே அவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. இதுவே தொடருமா? என்பதும் நிச்சயமில்லை. ஆனால், தொண்டர்கள்தான் மீண்டும் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிமுக தலைமை யாருக்கு? கூட்டுத் தலைமை உருவாகுமா? என்கிற கேள்விகள் தொடருகின்றன. பதவி ஆசை தனக்கில்லை என்றும் தான் இல்லை என்றாலும் வேறு ஒருவர் தலைமை பதவிக்கு வருவார் என்று எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதை எளிதில் கடந்து செல்ல முடியாது. அவரைத் தவிர்த்து வேறு ஒருவர் தலைமைக்கு வர வாய்ப்புள்ளது. அது மற்ற மூவரில் ஒருவரா? நால்வராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒருவரா? என்கிற கேள்வியும் எழுகிறது.

 

எனவே, அரசியல், சட்டப் போராட்டங்கள் இன்னும் சில மாதங்களை நகர்த்திச் செல்லும். வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நால்வரும் ஓரணியில் இணையவும் வாய்ப்புள்ளது. அது கூட்டணியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், அதுவரை திடீர் திருப்பங்கள், சந்திப்புகளுக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. பகைவரும் இல்லை என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.

 

-ஜோ மகேஸ்வரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.