ரயிலில் இன்சூரன்ஸ் செய்வதற்கு வெறுமனே 35 பைசா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பலனாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து செய்தித் தொகுப்பை காணலாம்.
ரயிலில் வாடிக்கையாக செல்லும் வழக்கமுடையவர்கள் தங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதோ அல்லது தட்கல் கோட்டாவில் டிக்கெட் பதிவு செய்யும்போது இன்சூரன்ஸ் எனும் ஒரு தேர்வு கவனித்திருப்பர். இன்சூரன்ஸ் தொகையும் வெறுமனே 35 பைசா மட்டுமே என இடம்பெற்றிருக்கும். ஆனால் பெரும்பாலான பயணிகள் இந்த இன்சூரன்ஸை தேவையற்ற செலவு என கடந்து சென்று விடுகிறார்கள்.
இந்த இன்சூரன்ஸால் என்னென்ன பலன்கள் உள்ளது. இதனால் பயணிகள் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
35 பைசா இன்சூரன்ஸால் கிடைக்கும் பலன்கள் :
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 5 முக்கியமான பலன்களும், பயணத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு ஏற்றவாறு தக்க நிவாரணங்களும் வழங்கப்படும்.
ரயில் விபத்து ஏற்பட்டு பயணிகள் உயிரிழந்தால்..?
ரயிலில் பயணம் செய்யும் பயணி தனது டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இன்சூரஸையும் சேர்த்து செலுத்திய பின் அந்த பயணத்தில் எதிர்பாரதவிதமாக ரயில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். 
ரயில் விபத்து ஏற்பட்டு பயணிகள் உடல் முழுவதுமாக பாதிப்படைந்தால்..?
ரயிலில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு அந்த பயணி பலத்த காயங்களுடன் உடல் முழுவதும் பாதிப்படைந்து உயிரோடு மீட்கப்பட்டால் அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
ரயில் விபத்து ஏற்பட்டு பயணிகளின் பாதி உடல் நிரந்தர பாதிப்படைந்தால்..?
ரயிலில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பாதி உடல் நிரந்தர பாதிப்படைந்தால் அவருக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால்..?
ரயிலில் அடிபட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவ சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், காப்பீடு செய்த பயணியின் பிணத்தை அவரின் சொந்த ஊருக்கு எடுத்து செல்ல காப்பீட்டு நிறுவனம் ரூ.10,000 வழங்கும் எனவும் ரயில்வேயின் காப்பீட்டு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் 288 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலும் இன்சூரன்ஸ் செய்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இன்சூரன்ஸ் செய்திருந்தால் உரிய இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். இனி ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதாக இருந்தால் தவறாமல் 35 பைசா இன்சூரன்ஸ் செலுத்தி அதன் மூலம் பயனை பெற்றுக் கொள்ளலாம்.







