தமிழ்நாட்டின் முதன்முறையாக, மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கானக ஆடியோ, வீடியோவுடன் கூடிய நவீன நூலகம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி பொறுப்பேற்ற பிறகு, மத்திய சிறைகளில் கைதிகளுக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார்.அந்த வகையில் சிறை கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், அவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் சிறை நூலகத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து இந்த நுலகத்திட்டதின் அடுத்த கட்டமாக, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் மாநிலத்திலேயே முதன்முறையாக மதுரை மத்திய சிறையில், கேபிள் வழியாக ஆடியோ, வீடியோவுடன் கூடிய நவீன டிஜிட்டல் நூலகத் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
இதன் மூலம் பல்வேறு புத்தகங்களின் கதைகளை ஒலி ஒளி காட்சிகளாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறைக்கைதிகள் தங்களின் அறைகளில் இருந்த படியே ஆடியோ, வீடியோ வழியாக புத்தகத்தின் முழு விளக்கத்தை கேட்டறிய முடியும். இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் முழு புத்தகத்தை படித்த திருப்தி கிடைக்கும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறையில் சிறை நூலகத்திற்கு 1 லட்சம் புத்தகங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 15,000 புத்தகங்கள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்டள்ளது. மேலும் மதுரை மத்திய சிறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், இந்தச் சிறையில் வெற்றியடைந்தால், மற்ற சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









