80s நடிகைகளான ஜெயஸ்ரீ, ஷோபனா, சுஹாசினி ஆகியோருடன் நடிகர் கமல்ஹாசன் பதான் படத்தைப் பார்த்தார்.
பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதியன்று வெளியாகி ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெளியான இப்படம் வசூல்ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பதான் திரைப்படம் 15 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 875 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில், பதான் படத்தின் சிறப்புக் காட்சியை உலக நாயகன் கமல்ஹாசன் பார்த்துள்ளார். அவருடன் நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், ஷோபனா மற்றும் ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரும் படத்தைப் பார்த்தனர். இது தொடர்பாக, கமல்ஹாசன், சுஹாசினி மற்றும் ஷோபனா ஆகியோருடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜெயஸ்ரீ பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசனுக்கான பதான் படத்தின் சிறப்புக் காட்சியின்போது தனக்கு கிடைத்த அழைப்பின்பேரில், 2-வது முறையாக பதான் படத்தை பார்த்தேன் என ஜெயஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
-ம.பவித்ரா








