சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் சார்பில், உடல் உறுப்புகளை விரைந்து பெற ட்ரோன் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்ரோன் செயல்பாட்டைத் துவக்கி வைத்தார். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு விரைந்து அனுப்பவும், தானம் பெறவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கால விரயத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த புதிய வகை தொழில்நுட்பம் இருக்கும்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில், மாநில மருத்துவம் – மக்கள்
நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனை
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிகளவில் வெற்றிகரமான இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த
மருத்துவர் சுரேஷ் ராவை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கௌரவித்தார்.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், 500 இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை MGM மருத்துவமனை செய்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. சுகாதாரத் துறையில் இது ஒரு மைல்கல். தேசத்துக்கான சிறந்த அர்ப்பணிப்பு இது. மக்களுக்கு உயிர் தரும், உயிரைப் பாதுகாக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். 3-ம் வகை நகரங்கள், சிறிய நகரங்கள், கிராமங்களுக்கும் உலகத்தர மருத்துவ சிகிச்சையை கொண்டு செல்வதன் மூலம் இந்தியா சுகாதாரத் துறையில் அடுத்த மைல்கல்லை எட்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிடும் வகையில், இந்தியாவில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
முக்கிய நகரங்களுக்கான பயண நேரத்தை குறைக்க விரைவுச்சாலைகள் அவசியம். அதை குறைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சென்னை – பெங்களூரு இடையே அமைக்கப்படும் விரைவுச்சாலை மூலம் பயண நேரம் 2 மணி நேரமாக குறையும். இதன் மூலம் கர்நாடகம், தமிழ்நாடு, தெலங்கானாவில் சுகாதாரத்துறை கட்டமைப்பு மேலும் மேம்படும். விபத்துகள் நிகழாதவகையில் பாதுகாப்பான முறையில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகள், அரபு நாடுகளில் இருந்து அதிகளவில் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகின்றனர். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். இந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும். ஏழை, எளிய மக்களுக்காக பாடுபடும் அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துகள் என்றார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப பல வசதிகளை பயன்படுத்தியதால் தான் தமிழ்நாடு மருத்துவத் துறையில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. உடல் உறுப்புகளை விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம். பேரிடர் காலத்தில் இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறைந்திருந்தது. ஆனால் ஏர் ஆம்புலன்ஸ் சேவை உட்பட பல சேவையில் MGM மருத்துவமனை சிறப்பாக
செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 796 அரசு மருத்துவமனைகள், 937 தனியார் மருத்துவமனைகள் என்று 1733 மருத்துவமனைகள் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழ்நாட்டில், முதலமைச்சரின் காப்பீட்டுத்
திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. MGM மருத்துவமனையில் மட்டும் 1,000 பேர் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. தொடர்ந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை
மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. வரும் காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை
சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை செலவு தொகை, தாமதமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில், அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும் என்றார்.
ட்ரோன் செயல்பாடு எப்படி ?
50 முதல் 200 கி.மீ., வரையிலான தூரத்துக்கு ட்ரோன்களை இயக்கிக்கொள்ள மத்திய,
மாநில அரசுகள் அனுமதி. 10 கிலோ முதல் 12 கிலோ வரையிலான எடை கொண்ட உடல் உறுப்புகளை சுமந்து செல்லும் வகையில் ட்ரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் ட்ரோன்கள் இயக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ட்ரோன்கள் மூலம் உடல் உறுப்புகளை கொண்டு செல்லும் நடைமுறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.
-ம.பவித்ரா









