தொழிலதிபர் கடத்தி கொலை; பிளாஸ்டிக் கவரில் சுருட்டி வீசப்பட்ட உடல்

சென்னையில் தொழிலதிபரை கடத்தி கொலை செய்துவிட்டு பிளாஸ்டிக் கவரில் சுருட்டி தூக்கிவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சின்மயா நகர் நெற்குன்றம் பாதை ஆற்று பாலம் அருகே பாலிதீன் கவரில் இறந்த ஒருவரின்…

சென்னையில் தொழிலதிபரை கடத்தி கொலை செய்துவிட்டு பிளாஸ்டிக் கவரில் சுருட்டி தூக்கிவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சின்மயா நகர் நெற்குன்றம் பாதை ஆற்று பாலம் அருகே பாலிதீன் கவரில் இறந்த ஒருவரின் உடல் கிடப்பதாக இன்று காலை 7மணிக்கு விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கை, கால் கட்டப்பட்ட நிலையில் கவரில் ரத்தகாயங்களுடன் இருந்த ஆண் நபரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விருகம்பாக்கம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து இறந்து கிடந்த நபரின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணை நடத்தினர்.விசாரணையில் நேற்றிரவு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் ஒன்று வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் புகார் அளித்த நபரை வரவழைத்து விசாரணை நடத்திய போது, கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடப்பது அவரின் தந்தை பாஸ்கரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இறந்து கிடந்த பாஸ்கரன் ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணன் புரத்தை சேர்ந்தவர் என்பதும் கான்கிரீட் மிக்ஸிங் தொழில் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பாஸ்கரன் நேற்று மாலை வழக்கம் போல வீட்டிலிருந்து கிளம்பியதாகவும், இரவு முழுவதும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பாஸ்கரனின் மகன் வாய்மொழியாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பாஸ்கரனின் ஏடி.எம் கார்டிலிருந்து நேற்று முதல் இன்று காலை வரை லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாஸ்கரனின் கார் விருகம்பாக்கம் நடேசன் நகரில் இருப்பதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில் போட்டி காரணமாக பாஸ்கரன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது பணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.