வடிவேலு எனும் மகாகலைஞனின் பெயரை கேட்டாலோ, அல்லது காட்சிகளை பார்த்தாலோ நம்மையும் அறியாமல் உதட்டில் புன்னகை ஒட்டிக்கொள்ளும்…. பிறவிக்கலைஞன் என்று பாராட்டப்படும் அவர் செய்துள்ள காமெடி அதகளங்கள் கொஞ்சநஞ்சமல்ல…
கைப்புள்ள, 23 ஆம் புலிகேசி, நாய் சேகர் என எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது இதயங்களிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் அவர் தமிழ்நாட்டின் ஆகசிறந்த மீம் கண்டெண்ட் மெட்டீரியலாகவும் இருக்கிறார்.
வடிவேலுவின் சினிமா கேரியரில் அவர் நடித்த தேவர் மகன் திரைப்படம் குணச்சித்திர நடிப்பிற்காக பேசப்பட்டது. அந்த வாய்ப்பு கிடைத்ததையும், சோக காட்சியில் நடித்த அனுபவத்தையும் கூட ஒரு மேடையில் அவரது பாணியில் கூறி நகைச்சுவை படுத்தி இருப்பார்.
இந்நிலையில் சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு பிறகு மீண்டும் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிட்டாமல் இருந்த அவர் மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் ஒப்பந்தமானார். பட அறிவிப்பின்போதே வடிவேலு பெயரை உச்சத்தில் வைத்து அடுத்து அடுத்து ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் என கடைசியாக உதயநிதி ஸ்டாலின் பெயரை போட்டு கவனத்தை ஈர்த்திருந்தனர் படக்குழுவினர்.
இந்நிலையில் மே 1 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கு முன் தினமான ஏப்ரல் 30 ஆம் தேதியே வெளியானது. அதில் கையில் துப்பாக்கியுடன் வடிவேலு அமர்ந்திருக்க, அவர் அருகில் பட்டாகத்தியுடன் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருக்கும் காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கட்டுரையின் தொடக்கத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்றி அமைத்திருக்கிறது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். ஆம்.. வடிவேலுவின் முகத்தை பார்த்தாலே புன்னகை வந்துவிடும் என்பதை மாற்றி ஒரு டெரர் லுக் கொடுக்கும் வடிவேலு ஈர்த்திருக்கிறார். இது இயக்குநரின் வெற்றியா?, வடிவேலு எனும் நடிப்பு சூரரின் வெற்றியா? என்பதை தாண்டி மாமன்னன் படம் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்தில் வடிவேலு புதிய அத்தியாயம் தொடங்குவார் எனும் நம்பிக்கையூட்டி இருக்கிறது படக்குழு.









