பட்டுக்கோட்டை அருகே கீழதோட்டம் என்ற மீனவர் கிராமத்தில் ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கடற்கரைக்குள் நீர்புகும் வாய்க்காலின் முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகள் முழுமை பெறவில்லை என மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா ராஜாமடம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட கீழத்தோட்டம் என்ற மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 250 க்கும் மேற்பட்ட பைபர் நாட்டுப் படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழக அரசின் உத்தரவின் பெயரில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலம் 8 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் கடற்கரைக்குள் நீர்புகும் வாய்க்காலின் முக துவாரங்களை அடைத்து கிடக்கும் மணல்களைத் தூர்வாரும் பணியும் டெண்டர் விடப்பட்டு, பணிகள் நடைபெற்று முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த பணியில், மீன் இறங்குதளமும் சில கட்டிடங்கள் மட்டும் கட்டப்பட்டுள்ளதாகவும் முக துவாரங்களின் மணல் திட்டுக்கள் தூர்வாரப்படவில்லை என்றும் அது பற்றி ஒப்பந்ததாரரிடம் கேட்ட பொழுது ஒதுக்கப்பட்ட நிதிக்கான வேலை முடிந்துவிட்டது, இதற்கு மேல் முக துவாரங்களில் தூர்வார முடியாது என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் இறங்கி மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






