தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்படும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நேற்றைய தினம் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதுமே ஸ்தம்பித்துப் போனது. மக்கள் வேலையின்றி பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டனர். பின்பு 2 ஆண்டுகளாகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் தற்போதுதான் கொரோனா குறைந்ததற்குப் பின் நிலையாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் பெட்ரோல் டீசல் விலையினால் மீண்டும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து 5 மாநில தேர்தலுக்குப் பின்னரே இந்த விலைவாசி உயர்த்தப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.







