இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்!

சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 6 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில்…

சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 6 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தின் போது மயக்கமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உட்பட பலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவை தோல்வியில் முடிந்து, போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தங்களது வேதனையான சூழல் முதலமைச்சரது கவனத்திற்கு சென்றுள்ளது என்றும், தங்களது கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாய் உள்ளத்தோடும், தந்தை உள்ளத்தோடும் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர்கள், தங்களது போராட்டத்தை கைவிடுவதாகவும், முதலமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர். நாளை நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் பயிற்சியில் இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.