தீவிரமடைந்த ஹிஜாப் விவகாரம்: 3 நாட்களுக்கு விடுமுறை

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் இரு தரப்பு போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய…

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் இரு தரப்பு போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், இஸ்லாமிய மாணவிகளுக்குப் போட்டியாக இந்து மாணவர்களும், மாணவிகளும் காவித் துண்டு அணிந்து பள்ளிக்கு வர முயன்றனர். இந்த விவகாரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியதை அடுத்து, இரு தரப்பினரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகல்கோட், தவனகிரி, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில், இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன. தவனகிரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

கர்நாடகாவின் மாண்டியாவில், ஹிஜாப் அணிந்தவாறு கல்லூரிக்கு வந்த மாணவியை சூழ்ந்து கொண்டு, காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள் கோஷம் எழுப்பினர். எனினும், துணிச்சலாக எதிர்த்து நின்ற அந்த மாணவி, ஹிஜாப் அணிவது எனது உரிமை என உரக்கக் கூறியவாறு எதிர் கோஷம் எழுப்பினார். இதையடுத்து, மாணவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்ப, அந்த மாணவி பதிலுக்கு அல்லாஹூ அக்பர் என கோஷம் எழுப்பினார். உடனடியாக அங்கு வந்த பள்ளி நிர்வாகிகள், மாணவியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். துணிச்சலை வெளிப்படுத்திய அந்த மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வர அனுமதி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சட்டப்படியே இந்த விவகாரம் அணுகப்படும் என்றும் உணர்வுப்பூர்வமாக அல்ல என்றும் தெரிவித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அரசியல் சாசனப்படியே தீர்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டது.

கர்நாடகாவில் மாணவர்கள் மற்றும் மத அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதை அடுத்து, அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே ஹிஜாப் விவகாரத்தில் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் வெளிநடப்பு செய்தன. ஹிஜாப் அணிவது குற்றமல்ல என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.