எலன் மஸ்க்கின் ட்விட்டருக்கு சவால் விடும் இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்!

ட்விட்டருக்கு போட்டியாக எழுத்து மூலம் செய்திகளை பதிவிடும் புதிய சமூக வலைதளத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை…

ட்விட்டருக்கு போட்டியாக எழுத்து மூலம் செய்திகளை பதிவிடும் புதிய சமூக வலைதளத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பயனர்களுக்கு தேவையான புதிய வசதிகளையும் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. அதிலும், குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து அதன் போட்டியாளரான மெட்டா நிறுவனம் பல்வேறு அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம், விளையாட்டு, சினிமா, அரசியல் போன்ற துறை சார்ந்த பிரபலங்களின் அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை குறிப்பிடும் வகையில் இலவசமாக வழங்கி வந்த ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை செயல்படுத்தியது. இந்த சூழலில் ட்விட்டருக்கு போட்டியாக எழுத்துகள் மூலம் செய்திகளை பதிவிடும் புதிய சமூக வலைதளத்தை மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் ஆரம்ப கட்ட முயற்சியில் இன்ஸ்டாகிராம் நிறுவன நிபுணர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் என்றும், லிங்குகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியில் மெசேஜ் செய்யும் அம்சம் இருந்தாலும் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றும் செயலியாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ட்விட்டர் போன்று செய்திகளைப் பகிரும் புதிய தளத்தை உருவாக்க இன்ஸ்டாகிராம் இறங்கியுள்ளது. இந்த புதிய செயலி வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.