” இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி..” – என தலைப்பிட்டு கேரள அரசு வெளியிட்ட விளம்பரம்..!!

” இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி..”  என தலைப்பிட்டு கேரள அரசு மாநில அரசின் சாதனைகளை விளக்கி  விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா,…

” இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி..”  என தலைப்பிட்டு கேரள அரசு மாநில அரசின் சாதனைகளை விளக்கி  விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ சமீபத்தில் வெளியானது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை சித்தரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் போராட்டங்களுக்கு இடையே, படத்தின் வெளியீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.

நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்கும் சங்பரிவார் அமைப்புகள் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார் .

இந்த நிலையில் இன்று கேரள அரசு “இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி” என தலைப்பிட்டு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் கேரள மாநிலத்தின் வளர்ச்சி , முன்னேற்றம் மற்றும் கேரள அரசின் தொலை நோக்கு திட்டங்களை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆயோக்கில் கேரள அரசு முதலிடம், மக்கள் நல குறியீட்டில் முதலிடம், இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பில் மகிழ்ச்சிகரமான மாநிலங்களில் முதலிடம் , மத்திய கல்வி அமைச்சகத்தின் குறியீட்டில் முதலிடம்,  மிகக் குறைந்த வறுமை குறியீடு  கொண்ட மாநிலம், நிதி ஆயோக்கின் சுகாதார குறியீட்டில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலிடம் உள்ளிட்ட பட்டியல் கேரள அரசின் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலும் புதுமையான திட்டங்கள், கட்டமைப்புகள், சுகாதாரம் , சுற்றுலாத்துறை, சமூக நலன், தொழிலாளர் , தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் கேரள அரசின் சாதனைகள் இந்த விளம்பரத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.