இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்த அப்பாவி லாரி ஓட்டுநரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர், லாரி ஓட்டுநர் கலைச்செல்வன். இவர், ஊருக்கு வெளியே உள்ள பெட்ரோல் பங்கில் , தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பச் சென்றுள்ளார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாகத் தாக்கிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து பங்க் ஊழியரைக் காப்பாற்ற முயன்ற கலைச்செல்வனை அந்த கும்பல் தாக்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து அந்த கும்பலின் கடுமையான தாக்குதலால் கலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இந்த கொடூரக் காட்சிகள், பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த கலைச்செல்வனை அங்கிருந்தவர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொலைவெறி கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கலைச்செல்வனுக்கு 6 மாத ஆண்குழந்தையும் இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். பெட்ரோல் பங்கிற்குச் சென்றுவிட்டு வருவதாகச் சொன்னவர் பிணமான செய்தியைக் கேட்ட கலைச்செல்வனின் குடும்பம் நிலைகுலைந்து போனது.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த பணங்குடி காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பணக்குடி கோடிக்காலணியைச் சேர்ந்த மணிஸ்ராஜா, பாலசுப்பிரமணியன், குமார், சிவராமன் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்பு போலீசாரின் தீவிர தேடுதலில் குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் இந்தத் தேடுதலையறிந்த முக்கியக் குற்றவாளி மணிஸ்ராஜா தலைமறைவாகியுள்ளார். விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆபத்திலிருந்த ஒருவரைக் காப்பாற்ற முயன்ற கலைச்செல்வன், பரிதாபமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.








