”மதுவிலக்கு: இரட்டைவேடம் போடும் திமுக” – ஒபிஎஸ்

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மதுபானக் கடைகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவே நடவடிக்கை எடுத்து வருவதாக அதிமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.…

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு மதுபானக் கடைகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவே நடவடிக்கை எடுத்து வருவதாக அதிமுக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2016ம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், கடந்த 2021ம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், இவற்றிற்கு முற்றிலும் முரணான வகையில் டாஸ்மாக் மதுபானங்களின் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவே திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் நடத்தப்படும் அனைத்து பார்களையும் ஆறு மாதங்களுக்குள் மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பினை எதிர்த்து திமுக அரசு தற்போது மேல்முறையீடு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

மதுவிலிருந்து வருகின்ற வருமானத்தை அதிகரிப்பதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்கள் அமைப்பதிலுமே திமுக அரசு தீவிரம் காட்டுவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் ஓ. பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.