கொரோனா தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறு, அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசிகளுக்கான மூலப் பொருட்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நேற்று உரையாடினார். அப்போது, இரு நாடுகளிலும் கொரோனா பரவலின் நிலை குறித்து இருவரும் ஆலோசித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, கொரோனா தடுப்பூசி உற்பத்தி தடையின்றி சுமூகமாக நடைபெற, அமெரிக்கா தொடர்ந்து மூலப் பொருட்களை வழங்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொண்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான சுகாதார ஒத்துழைப்பின் மூலம், சர்வதேச சவாலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரசை, எதிர்கொள்ள முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.







