நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சிறுத்தை புலிகள் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு 8 சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்பட்டது. நமீபியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி சிறுத்தைப்புலிகள் கொண்டுவரப்பட்டன. சிறுத்தை இனம் 1952 ம் ஆண்டுடன் இந்தியாவில் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வினத்தை மீட்கும் விதமாக சிறுத்தைப்புலிகள் நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
https://twitter.com/narendramodi/status/1571161121532547072
இந்தச் சிறுத்தைப்புலிகளை பிரதமர் மோடி மத்தியப் பிரதேச குனோ தேசிய பூங்காவில் நேற்று விடுவித்தார். அதில் அடைப்பு எண் ஒன்றிலிருந்து இரண்டு சிறுத்தை புலிகளையும், அதன் பிறகு 70 மீட்டர் தொலைவில், இரண்டாவது அடைப்பிலிருந்த மற்றொரு சிறுத்தை புலியையும் அவர் விடுவித்தார். பின்னர் அவைகளை கேமரா மூலம் புகைப்படமும் எடுத்தார். 
பூங்காவில் விடப்பட்ட சிறுத்தைப் புலிகளைக் கண்காணிக்க அனைத்து சிறுத்தைப் புலிகளிலும் செயற்கைக்கோள் மூலம் ரேடியோ காலர்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறுத்தைப் புலியையும் கண்காணிக்க ஒரு கண்காணிப்புக் குழு உள்ளது. அந்த குழு 24 மணி நேரமும் சிறுத்தைப் புலிககளின் நடமாட்டத்தைக் கண்காணித்து கொண்டே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த சிறுத்தைப்புலிகளின் ஆயுட்காலம் 14 முதல் 20 வருடங்களாகும். மேலும் 34 முதல் 64 கிலோ வரை எடை கொண்டவை, இவற்றின் உயரம் 67 முதல் 94 செ.மீ வரை வளரக்கூடியவை என அறியப்படுகிறது. 
உலகின் அதிவேகமாக ஓடும் நில விலங்காக சொல்லப்படும் இந்த சிறுத்தைப் புலிகள், 3 நொடிகளில் 102 கி.மீ வேகத்தை தொடவல்லவை. இவற்றின் உடல் வாகும் அதிவேக ஓட்டத்திற்கு ஏற்ற வைகையில் அமைந்துள்ளது.
மேலும் பகல் நேரத்தில் வேட்டையாடக்கூடிய விலங்கு உலகில் அதிகம் அழிந்து வரும் நிலையில், பூனை இனத்தில் இந்த சிறுத்தைப் புலிகள் முக்கிய இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் 7,000 சிறுத்தைப் புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.







