கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலரிடம் தகவல் அளித்ததாகவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக, அவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.




