நாட்டில் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்குக்கும் கீழ் பணவீக்க அளவு குறைந்த நிலையில் அது மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் 2022-23ம் ஆண்டுக்கான துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாத்திற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில்லறை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில், அதனை மேலும் குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அத்தியாவசிய பொருள்களின் விலை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. குறைந்த பணவீக்கத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே பொருளாதார தேக்கநிலை குறித்த அச்சம் தேவையில்லை என குறிப்பிட்டார்.
இந்த ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் நிதி பற்றாக்குறையானது 6.4 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வங்கி கடனுக்கான வட்டி மற்றும் அசலை 90 நாள்களுக்கு மேல் செலுத்தாததால் ஏற்படும் செயல்படாத சொத்துக்களின் அளவு, மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 7.28 சதவீதம் என்ற அளவுக்கு வெகுவாக குறைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற நாடுகளின் நாணயங்களை விட இந்திய ரூபாய் மதிப்பு சிறப்பாக உள்ளது. அதோடு மற்ற நாணயங்களோடு ஒப்பிடும் போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி என்பதும் மிக குறைவு தான் என்று அவர் கூறினார்.
மேலும், உலக வங்கி அறிக்கையை குறிப்பிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்திய செலவாணி கையிருப்பிலும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று தெரிவித்தார்.
பின்னர், 2022-23ம் நிதியாண்டில் ரூ.3.25 லட்சம் கோடி நிகர செலவினத்துக்கான துணைநிலை மானியக் கோரிக்கை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.







