“3 மாநிலங்களில் ஊடுருவல்கள் முழுமையாக நிறுத்தப்படும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

“அசாமை ஊடுருவல்காரர்களிடமிருந்து மீட்போம்” என ஸ்ரீபூமி பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் ஸ்ரீபூமியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் “வாக்கு வங்கி அரசியலை” கடுமையாகச் சாடினார். “நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) பற்றிப் பேசும்போதெல்லாம் காங்கிரஸ் அதை எதிர்க்கிறது. ஏனெனில், CAA அமல்படுத்தப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லாமல் போய்விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். 1950களில் இருந்தே காங்கிரஸ் கட்சி மிகவும் கீழ்த்தரமான வாக்கு வங்கி அரசியலைச் செய்து வருகிறது.

அசாமின் தந்தை என அழைக்கப்படும் கோபிநாத் போர்டோலோய், அஸ்ஸாமைப் பாதுகாக்க 1950-ல் ‘குடியேற்றவாசிகள் சட்டம்’ கொண்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் தனது அரசியலுக்காக அதை நீர்த்துப்போகச் செய்தது. 1983-ல் காங்கிரஸ் கொண்டு வந்த IMDT சட்டத்தின் மூலம் ஊடுருவல்காரர்களுக்கு அஸ்ஸாமில் தஞ்சம் அளிக்கும் வேலையைச் செய்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பகுதியையும் ஊடுருவல்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.

ராகுல் காந்தி அவர்களே நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள், மூன்று தலைமுறைகள் ஆனாலும் சரி, அசாமை ஊடுருவல்காரர்களிடமிருந்து முழுமையாக விடுவிப்போம். அசாம், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக-NDA கூட்டணி அரசு அமைந்தவுடன், ஊடுருவல்கள் முழுமையாக நிறுத்தப்படும். அதுமட்டுமின்றி, ஊடுருவல்காரர்களைத் தேடிப் பிடித்து நாட்டை விட்டு வெளியேற்றுவோம்.

இந்த ஊடுருவல்காரர்கள் நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு, ஏழைகளின் ரேஷன் பொருட்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பறிக்க முயல்கிறார்கள். இவர்களை வெளியேற்றும் பணியை பாஜக அரசு மட்டுமே செய்யும். இந்த நிலத்தின் பெயர் கரீம்கஞ்ச் அல்ல, ‘ஸ்ரீபூமி’ என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும். இப்பகுதியில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் பாஜகவின் மடியில் போட்டு ஒரு புதிய சாதனையை மக்கள் படைக்க வேண்டும்.

இன்று பிரச்சாரத்தின் கடைசி நாள், நீங்கள் அளிக்கும் வாக்கு வெறும் எம்.எல்.ஏ-வை உருவாக்கவோ அல்லது ஹிமந்த பிஸ்வா சர்மாவை மீண்டும் முதலமைச்சராக்கவோ அல்ல, மாறாக, ஒட்டுமொத்த பராக் பள்ளத்தாக்கையும்  ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிக்கவே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.