#INDvsNZ : இறுதிப்போட்டியை நேரில் காண அகமதாபாத்திற்கு வருகை தந்த தோனி………..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அகமதாபாத்திற்கு வருகை தந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

இப்போட்டியை நேரில் காண அரசியல்வாதிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வருகை தரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி நரேந்திர மோடி மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அகமதாபாத்திற்கு வருகை தந்துள்ளார். இதனை தொடர்ந்து தோனி, நரேந்திர மோடி மைதானத்திற்கு சென்று இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளிப்பார் எனத் தெரிகிறது.

முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து இடையிலான அரையிறுதி போட்டியை எம்.எஸ். தோனி தனது மனைவியோடு சென்று பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஊக்குவிக்கும் வகையில் ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட்டது. இதில் இளம் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. மேலும் இந்த வெற்றி அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்திய அணியை வழிநடத்த தோனிக்கு அடித்தளமும் அமைத்து கொடுத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.