பாகிஸ்தானின் கராச்சியில் இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக இந்திய விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.
ஷார்ஜாவில் இருந்த ஐதராபாத் நகருக்கு வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி நகர விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
6E-1406 இண்டிகோ விமானம் ஷார்ஜாவிலிருந்து ஐதாரபாத் விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அருகில் இருந்த கராச்சி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கப்பட்டது. இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. அந்த விமானத்துக்கு பதிலாக மற்றொரு விமானம் கராச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய இரண்டாவது இந்திய விமானம் இதுவாகும்.
இதற்கு முன்பு டெல்லியிலிருந்து துபாய்க்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததை அடுத்து, கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதில் 138 பயணிகள் இருந்தனர். அவர்களை துபாய்க்கு அழைத்துச் செல்ல இந்தியாவிலிருந்து மற்றொரு விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.
விமானம் தரையிறங்குவதற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக ஸ்பைஸ்ஜெய் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்திருந்தார்.








