பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீநரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவல்துறை…

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீநரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவல்துறை உதவி துணை ஆய்வாளர் முஷ்டாக் அகமது தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தார்.

முஷ்டாக் அகமதுவின் மகன் கடந்த 2020ல் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்த ஃபரூக் அப்துல்லா, தற்போது தீவிரவாதிகளால் முஷ்டாக் அகமது கொல்லப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

உண்மையில் யார் கொலைகாரர் யார் பாதுகாவலர் என்பதே தெரியாத நிலை காஷ்மீரில் நிலவுவதாகக் கூறிய ஃபரூக் அப்துல்லா, மகன் – தந்தை என இருவரையும் பறிகொடுத்த அந்த குடும்பம் இதைத் தாங்கிக் கொள்ள தேவையான மன வலிமையைப் பெற இறைவனை வேண்டுவதாகத் தெரிவித்தார். மேலும் அந்த குடும்பம் கண்ணியமாக வாழ தேவையான பொருளாதார உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமானால், இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்திய ஃபரூக் அப்துல்லா, மக்களின் மனங்களை வெல்லாத வரை காஷ்மீரில் படுகொலைகள் நிற்காது என்றார்.

இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, அதுபோன்ற ஒரு நிலை இந்தியாவுக்கு வராமல் இருக்க கடவுள் நம்மை காப்பாற்ற வேண்டும் என கூறினார்.

அதுபோன்ற ஒரு நிலை இந்தியாவுக்கு வருமா என்ற கேள்விக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.

இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு என தெரிவித்த ஃபரூக் அப்துல்லா, வேற்றுமைகளை மதிக்க தவறுமானால் நமது நாடு வீழும் என எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.