முக்கியச் செய்திகள் தமிழகம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் செய்த தவறு அம்பலம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது.

 

கடந்த மே 5-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. கடந்த மாதம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அந்த வகையில், தேர்வு முடிவுகள் வெளியான பின்பு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று, தங்களுக்கான மதிப்பெண்களை சரிபார்த்தபோது, அதில் குளறுபடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற உண்மையான மதிப்பெண்களை காட்டிலும், குறைவான மதிப்பெண்களை கணக்கிட்டு ஆசிரியர்கள் வழங்கியது தெரியவந்திருக்கிறது.

வேதியியல் பாடத்தில் 57 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு செய்முறை தேர்வு 30 மதிப்பெண்கள் என 87 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவரின் விடைத்தாளை சோதித்தபோது 67 மதிப்பெண்கள் மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண் 30-ஐ கூட்டினால் அம்மாணவர் 97 மதிப்பெண்களை வேதியியல் பாடத்தில் பெற்றிருக்க வேண்டும், ஆனால் விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்கள் அதன்பின்னர் பரிசோதித்த விடைத்தாள் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் நடைபெற்றுள்ள தவறை உணராமல் தவறான மதிப்பெண்களை வழங்கியுள்ளதை மாணவர்கள் கண்டறிந்து சமூகவலைதளங்களில் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

அதேபோல், இயற்பியல் பாடத்தில் மாணவர் ஒருவர் 72 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் விடைத்தாள் நகலைப் பெற்று சரிபார்த்ததில், அம்மாணவர் 82 மதிப்பெண்களை பெற்றுள்ளதும் தெரியவந்திருக்கிறது. மேலும் கணினி அறிவியல் பாடத்தில் 85 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் விடைத்தாள் நகலைப் பெற்று மதிப்பெண்களை சரிபார்த்ததில் அவர் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்திய பிறகு சரியாக திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க முதல்நிலை மதிப்பீட்டாளர், இரண்டாம் நிலை மதிப்பீட்டாளர், முதன்மை மதிப்பீட்டாளர் என்று ஆசிரியர்கள் தேர்வுத் துறையால் பணியமர்த்தப்பட்ட நிலையில், அவர்கள் யாரும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் சரியாக கணக்கிடப்பட்டதா என்பதை சரிபார்க்கத் தவறியது இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வில் மதிப்பெண்களை முறையாக கணக்கிடாததால், பொறியியல், வேளாண் படிப்புகள், கால்நடை, மருத்துவ அறிவியல் படிப்புகள், கலை & அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட அனைத்திலும் மாணவர்களுக்கான உரிய இடம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளதாகவும், இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

இனிவரும் காலங்களில் மாணவர்களின் மதிப்பெண்கள் சரியான முறையில் கணக்கிடப்படுகிறதா? என்பதை தேர்வுத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும், தவறிழைத்த ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓடும் பஸ்சில் குண்டுவெடிப்பு: சீன என்ஜினீயர்கள் உட்பட 13 பேர் பலி

Gayathri Venkatesan

கோவா: 2 MLA-க்களை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் கோரிக்கை

Mohan Dass

சட்டமன்ற தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிட தயார்: கருணாஸ்

Saravana